மோடியின் அதிரடி உத்தரவை அடுத்து மியான்மர் நாட்டிற்கு சென்று தாக்குதல் நடத்திய இந்திய ராணுவம்.

indian armyகடந்த சில நாட்களுக்கு முன்னர் மணிப்பூரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவத்தினர் மீது தீவிரவாதிகள் அதிபயங்கர தாக்குதல்கள் நடத்திதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். கடந்த 20 ஆண்டுகளில் மணிப்பூரில் ராணுவத்தினர் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு தக்க பதிலடி கொடுக்க மத்திய பாஜக அரசு முடிவு செய்தது.

இந்நிலையில், மணிப்பூர் தாக்குதல்களில் தொடர்புடைய தீவிரவாதிகள், மியான்மர் பகுதியில் பதுங்கி இருப்பதாகவும் மீண்டும் அவர்கள் இந்தியா மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் உளவுத்துறையினர்களிடம் இருந்து உறுதியான தகவல்கள் கிடைத்தன.

இதையடுத்து எச்சரிக்கையான இந்திய ராணுவம், மியான்மர் அரசின் அனுமதியை பெற்று, விமானப்படை உதவியுடன், நேற்று காலை மியான்மர் எல்லைக்கு அப்பால், தீவிரவாதிகளை குறிவைத்து அதிரடியான  தாக்குதல்களை நடத்தியது. அப்போது தீவிரவாதிகளுக்கும், ராணுவ கமாண்டோக்களுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் 50 க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ராணுவம் எல்லை தாண்டி தாக்குதல் நடத்துவது பல வருடங்களுக்கு பின்னர் நடந்துள்ள நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.  
மியான்மருக்குள் புகுந்து தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்த பிரதமர் மோடி உத்தரவிட்டார் என்ற தகவலை மத்தியஅமைச்சர் ராஜ்யவர்தன் சிங் தெரிவித்து உள்ளார்.

இதேபோன்று இந்தியாவின்  பாகிஸ்தானை ஒட்டிய பகுதிகளிலும் இந்தியா இதுபோன்ற தாக்குதலில் ஈடுபடுமா? என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், “தீவிரவாதிகளுக்குப்  புகலிடம் அளிக்கும் அனைத்து நாடுகளுக்கும் ஒரே செய்தியைக் கூறிக்கொள்கிறோம். மேற்கு மட்டுமல்ல எந்த ஒரு   குறிப்பிட்ட நாட்டிலும் இது போன்ற நடவடிக்கையில் ஈடுபடுவோம். இந்தியாவுக்குள்ளும் தீவிரவாத  எண்ணத்துடன் எந்த ஒரு இயக்கம் செயல்பட்டாலும் விரட்டுவோம் ” என்று உறுதியாகத் தெரிவித்தார்.

Leave a Reply