2020-ல் சீனாவின் மக்கள் தொகையை இந்தியா மிஞ்சிவிடுமா?
ஒவ்வொரு வருடமும் உலக மக்கள்தொகை தினம் ஜூலை 11ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதுபோல்வே இந்த வருடமும் உலக மக்கள் தொகை தினம் நேற்று முன் தினம் அனுசரிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போதைய புள்ளிவிவரத்தின்படி இந்தியாவின் மக்கள் தொகை 127,42,34,538 என தெரிய வந்துள்ளது. இது உலக மக்கள் தொகையில் 17.23 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வரும் 2020ஆம் ஆண்டு சீனாவின் மக்கள் தொகையை இந்தியா மிஞ்சிவிடும் என்று கூறப்படுகிறது. இதற்கு இந்தியாவில் அதிகளவு நடைபெறும் இளவயது திருமணங்களே காரணம் என்று கூறப்படுகிறது.
உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா மேலும் கூறியதாவது:
எவ்வளவுதான் நடைமுறைகள் இருந்தாலும் அரசு மட்டுமே மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த முடியாது. இதில் தொண்டு நிறுவனங்களுக்கும் பங்கு உண்டு. அவர்களுடைய செயல்பாடுகள் மூலம் மக்களிடம் மிகப்பெரிய அளவில் விழிப்புணர்வை கொண்டு செல்ல முடியும்.
நாட்டில் 36 மாநிலங்களில் 24 மாநிலங்கள் மக்கள் தொகையைக் கட்டுக்குள் வைத்திருக்கின்றன. இதேபோல் மற்ற மாநிலங்களும் மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும். கடந்த பத்தாண்டுகளில் மக்கள் தொகை அதிகரிக்கும் சதவீதம் குறைந்துள்ளது.
1952-ம் ஆண்டு நாம் மக்கள் தொகை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தொடங்கினோம். இன்று அது நமக்குப் பலன் தருகிறது. மக்கள் தொகைதான் இந்தியாவின் பலமும் பலவீனமும் ஆகும். எனினும், இங்கு இளைஞர்களின் எண்ணிக்கை அதிகம் என்பது மிக முக்கியமான பலம் ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.