இந்திய வீரர் உடல் சிதைக்கப்பட்ட விவகாரம்: பாகிஸ்தான் தூதரை நேரில் வரவழைத்து இந்தியா கண்டனம்
ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினரால் இந்திய ராணுவ வீரரின் உடல் சிதைக்கப்பட்ட விவகாரம் இந்தியாவை பெரும் கொந்தளிப்படைய செய்துள்ளது. மனிதாபிமானம் இன்றி பாகிஸ்தான் ராணுவர்கள் செய்த இந்த செயலுக்கு பாகிஸ்தான் தூதரை நேரில் வரவழைத்து இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினரால் உடல் சிதைக்கப்பட்ட ராணுவ வீரரின் குடும்பத்தாருக்கு ரூ.12 லட்சம் இழப்பீடு தொகை வழங்கி பஞ்சாப் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜம்மு – காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தின் கிருஷ்ணகாதி பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாடு கோடருகே நேற்று முன் தினம் காலையில் இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் மற்றும் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, பாகிஸ்தான் ராணுவத்தினர் திடீரென அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் இந்திய ராணுவத்தின் இளநிலை அதிகாரி பரம்ஜீத் சிங் மற்றும் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த தலைமை காவலர் பிரேம் சாகர் ஆகியோர் வீரமரணம் அடைந்தனர்.
மேலும், வீரமரணம் அடைந்த இந்திய வீரர்களின் உடல் உறுப்புகளை துண்டித்து, அவர்களது உடல்களை பாகிஸ்தான் ராணுவத்தினர் சிதைத்துள்ளனர். இச் சம்பவத்துக்கு நாடு முழுவதும் இருந்து கண்டனக் குரல்கள் எழுந்து வருகின்றன.
இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டம் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதரான அப்துல் பசித்தை நேரில் அழைத்து கண்டனம் விடுத்துள்ளது. மேலும் பாகிஸ்தான் அரசுக்கு நேரடியாக இந்தியா கண்டனம் விடுக்க இருப்பதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன