ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியாவுக்கு கிடைத்த 4வது தொடர்வெற்றி
ஆசியகோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது வங்கதேசத்தில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்திய அணி பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் இலங்கை ஆகிய மூன்று அணிகளை வென்றுள்ள நிலையில் நேற்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியுடன் மோதியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆனால் இந்திய பந்துவீச்சாளர்களின் அபார பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாத அந்த அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 81 ரன்களை மட்டுமே எடுத்தது.
82 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 10.1 ஓவரில் 82 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதனால் இந்த தொடரில் இந்திய அணி நான்கு போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளது. 39 ரன்கள் எடுத்த ரோஹித் சர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இன்று கடைசி லீக் போட்டியாக பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன. இவைகளில் எந்த அணி வெற்றி பெற்றாலும் இறுதி போட்டிக்கு செல்ல முடியாது என்பதால் இன்றைய போட்டி முக்கியத்துவம் இல்லாத போட்டியாக அமைந்துள்ளது.
வரும் ஞாயிறு அன்று இந்தியா மற்றும் வங்கதேச அணி இறுதிப்போட்டியில் மோதுகின்றன.