புதுடில்லி: அடுத்த ஆண்டு நடக்கவுள்ள உலக கோப்பை ஹாக்கி தொடருக்கு இந்திய அணி தகுதி பெற்றது.
நெதர்லாந்தில், அடுத்த ஆண்டு மே 31ம் தேதி முதல் ஜூன் 15ம் தேதி வரை ஆண்களுக்கான 13வது உலக கோப்பை ஹாக்கி தொடர் நடக்கவுள்ளது. கடந்த ஜூன் மாதம் நெதர்லாந்தின் ரோட்டர்டாம் நகரில் நடந்த உலக ஹாக்கி லீக் தொடருக்கான அரையிறுதியில் இந்திய அணி 5வது இடம் பிடித்தது.
கடந்த செப்டம்பர் மாதம் மலேசியாவில் நடந்த ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில், பைனலில் தோல்வி அடைந்த இந்தியா, உலக கோப்பை ஹாக்கி தொடருக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது.
இந்நிலையில் உலக கோப்பை தொடருக்கு தகுதி பெற, இந்திய அணி, நியூசிலாந்தில் நடந்த ஓசியானா கோப்பை தொடரை எதிர்நோக்கி காத்திருந்தது. இதில் ஏற்கனவே உலக கோப்பை தொடருக்கு தகுதி பெற்ற, ஆஸ்திரேலியா அல்லது நியூசிலாந்து அணி வெற்றி பெற்றால், இந்திய அணியின் இடம் உறுதியாகிவிடும் என்ற நிலையில், ஓசியானா கோப்பையை ஆஸ்திரேலியா கைப்பற்றியது.
இதனையடுத்து இந்திய அணியின் உலக கோப்பை இடம் உறுதியானது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு (எப்.ஐ.எச்.,) நேற்று வெளியிட்டது.
இதுவரை நெதர்லாந்து, பெல்ஜியம், நியூசிலாந்து, ஸ்பெயின், இங்கிலாந்து, மலேசியா, அர்ஜென்டினா, ஜெர்மனி, தென் கொரியா, ஆஸ்திரேலியா, இந்தியா உள்ளிட்ட 11 அணிகள் தகுதி பெற்றுள்ளன.