இந்து நாடாக இந்தியாவை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மாற்றுவார்’ என்று கோவா மாநில அமைச்சர் தீபக் தவாலிக்கர் கூறிய சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவா மாநிலம் சட்டசபை கூட்டம் தற்போது நடந்து வருகிறது. இந்த கூட்டத் தொடரில் நேற்று பேசிய அமைச்சர் தீபக் தவாலிக்கர் “பாரத பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்தியா, இந்து நாடாக மேம்படும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அதற்குரிய நடவடிக்கைகளை பிரதமர் உறுதியாக எடுப்பார்’ என்று பேசினார்.
அமைச்சரின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்தியாவை மதச்சார்பற்ற நாடு என உலக நாடுகள் கூறிவரும் நிலையில் அமைச்சரின் இந்த கருத்து கண்டனத்துக்குரியது என்று எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன.
கோவா மாநிலத்தில் பாரதிய ஜனதாவும், மகாராஷ்டிராவாதி கோமன்தக் கட்சியும் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வருகின்றன. அமைச்சர் தீபக் தவாலிக்கர், மகாராஷ்டிராவாதி கோமன்தக் கட்சியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவருடைய சகோதரரும் அமைச்சருமான சுதின் தவாலிக்கர் என்பவர், “பெண்கள் குட்டைப்பாவாடை அணிவதால்தான் பாலியல் பலாத்காரம் அதிகரித்துள்ளது” என சமீபத்தில் சர்ச்சைக்குரிய கருத்து கூறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.