12-வது ஆசியான்-இந்தியா மாநாடு மற்றும் கிழக்கு ஆசிய நாடுகள் மாநாடு ஆகியவற்றில் கலந்து கொள்ள இந்திய பிரதமர் நரேந்திரமோடி மியான்மர் சென்றுள்ளார். 2 நாள் அரசுமுறை பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி நே பி தா என்ற நகரில் உள்ள பார்க் ராயல் ஓட்டலில் தங்கி உள்ளார்.
நேற்று அமெரிக்க அதிபர் ஒபாமா உள்பட பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து மோடி பேசினார். அதில் முக்கியமாக மியான்மர் நாட்டின் எதிர்க்கட்சித் தலைவியும், அந்த நாட்டில் ஜனநாயகத்துக்காக 25 ஆண்டுகளுக்கும் மேலாக குரல் கொடுத்தருபவமான ஆங் சான் சூகியும் ஒருவர். அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரான ஆங் சான் சூகி மோடியை அவர் தங்கியிருந்த ஓட்டல் அறையில் சந்தித்தார்.
பிரதமர் மோடியை ஆங் சான் சூகி சந்திப்பது இதுதான் முதல்முறை. மொடியை சந்தித்து பேசிவிட்டு வெளியே வந்த அவர் இந்தியாவை தனது 2-வது தாய்நாடு என்றும், மோடியின் சந்திப்பு வரலாற்று சிறப்பு வாய்ந்தது என்றும் கூறியுள்ளார். ஆன் சான் சூகி தனது இளவயதில் டெல்லி லேடி ஸ்ரீராம் கல்லூரியில்தான் பட்டப்படிப்பை முடித்தவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும் இவரது தாயார் தா கின் யீ இந்தியாவுக்கான மியான்மர் தூதராக பணியாற்றியவர்.