இலங்கையில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் படுதோல்வி அடைந்து பதவியை இழந்த முன்னாள் அதிபர் ராஜபக்சே, தனது தோல்விக்கு இந்திய புலனாய்வுத்துறை அமைப்பு முக்கிய காரணம் என்று சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
ஹாங்ஹாங்கில் இருந்து வெளிவரும் சௌத் சைனா போஸ்ட் என்ற நாளிதழுக்கு ராஜபகசே அளித்துள்ள பேட்டியில், இலங்கையின் புதிய அரசாங்கமானது தேவையற்ற முறையில் உள்நாட்டு அரசியலுக்குள் சீனாவை இழுத்து நியாயமற்ற முறையில் செயற்படுவதாகவும், சீனா இலங்கைக்கு வழங்கியுள்ள உதவிகளுக்கு இலங்கையர்கள் நன்றி கூற கடமைப்பட்டவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
எனினும் தற்போதைய அரசாங்கம் சீனாவை குற்றவாளியை போல் நடத்துவதாக குற்றம்சாட்டியுள்ள ராஜபக்சே, கடந்த 3 ஆண்டுகாலமாக இடம்பெற்று வந்த யுத்தம் முடிந்த பின்னர் 2009ம் ஆண்டு முதல் பீஜிங் இலங்கைக்கு 4 பில்லியன் அமெரிக்க டாலர்களை சலுகை கடனாகவும், நன்கொடையாகவும் வழங்கியுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், சீனாவின் நிதியுதவியில் தற்போது 70 வீத உட்கட்டமைப்பு திட்டங்கள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நான் சீனாவுக்கு சார்பானவன் என அநேகர் தெரிவித்து வருகின்றனர், நான் இந்தியாவுக்கோ, அமெரிக்காவுக்கோ சார்பானவன் அல்ல நான் ஒரு இலங்கையன்.
நான் பதவியில் இருந்த போது இலங்கையை அபிவிருத்தியின் பாதையில் கொண்டு செல்வதற்கு எண்ணினேன். எனது எண்ணத்திற்கு அப்போது சீன அரசாங்கமே கரம் கொடுத்து உதவியது. உதாரணத்திற்கு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தையும் விமான நிலையத்தையும் நான் இந்தியாவுக்கு வழங்க முனைந்தேன்.
எனினும் அவர்கள் அதில் ஆர்வம் காட்டாமல் இருந்தது. அப்போது சீன அரசாங்கமே இதற்கான நிதியை வழங்க முன்வந்தது. மேலும் கொழும்பு துறைமுக நகர திட்டத்திற்கு உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் அனுமதி வழங்கப்பட்டது எனும் கருத்து உண்மைக்கு புறம்பானது.
இதேவேளை என்னை சந்திப்பதற்காக வரும் அநேக மக்கள் மீண்டும் அரசியலுக்கு வருமாறு வேண்டுகோள்களை விடுப்பதுடன், எனக்கு எதிராக வாக்களித்தமைக்காக மன்னிப்பும் கோருகின்றனர். இவ்வாறு கோரும் மக்களிடம் நான் ஓய்வாக இருப்பதற்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்குமாறு கேட்டுகொள்கின்றேன். இதுதான் எனது தற்போதைய வாழ்க்கை.
நான் மீண்டும் அதிகாரத்திற்கு வருவது குறித்து இதுவரை எவ்வித தீர்மானங்களையும் எடுக்கவில்லை. மக்களின் தீர்மானமே எனது தீர்மானம்.
அமெரிக்காவும், மேற்குலக நாடுகளும், இந்திய புலனாய்வு துறையும் எனக்கு எதிராக செயற்பட்டதால்தான் நான் ஜனவரியில் இடம்பெற்ற தேர்தலின் போது தோல்வியடைந்தேன். இது அநேகருக்கும் தெரிந்த ஒரு விஷயம், அமெரிக்கா மற்றும் நார்வே எனக்கு எதிராக பகிரங்மாக செயற்பட்டதுடன், நேரடியாகவும் என்னை கவிழ்க்க திட்டமிட்டது.
சீனாவின் நீர்மூழ்கி கப்பல்கள் இலங்கைக்கு வரும்போதெல்லாம் நாங்கள் இந்தியாவுக்கு அறிவிப்போம். சீன ஜனாதிபதியின் இலங்கை விஜயத்தின் காரணமாகவே நீர்மூழ்கி கப்பல்கள் இலங்கைக்கு வந்தன என தெரிவித்துள்ளார்.