எங்கள் மதத்தின் பெயர் இந்தியா. அரசியல் சாசன புத்தகம்தான் எங்கள் புனித நூல் என்று பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி முழங்கியுள்ளார்.
ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவித்து பதில் உரை அளித்த பிரதமர் மோடி, ‘நிலம் கையகப்படுத்தும் மசோதாவினால் எந்த விவசாயிக்கும் பாதிப்பு வராது. அப்படி பாதிப்பு வருவதாக நிரூபித்தால் இந்த சட்டத்தை திருத்தம் செய்ய எங்கள் அரசு தயாராக உள்ளது. இத்தனை ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் விவசாயிகளுக்காக எதுவுமே செய்யவில்லை. அப்படி செய்திருந்தால் தேர்தலில் தோற்றிருக்க மாட்டார்கள்.
உண்மையில் நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை கொண்டு வந்தது காங்கிரஸ் கட்சிதான். அதில் சில திருத்தங்களை மட்டும் செய்து நாங்கள் இப்போது கொண்டு வந்துள்ளோம். இந்த சட்டத்தை காங்கிரஸ் முதல்வர்களே ஆதரிக்கின்றனர். ஆனால் இதை காங்கிரஸ் கட்சியின் மேலிடம் மறைக்கின்றது.
காங்கிரஸ் ஆட்சியில் இருந்த பிரச்சனைகள் ஒவ்வொன்றையும் நாங்கள் சரிசெய்து கொண்டு வருகின்றோம். திட்டங்களின் பெயர்களை மாற்றுவதாக காங்கிரஸ் குற்றம் கூறுகின்றது. திட்டங்களில் பெயர் முக்கியமல்ல. அந்த திட்டத்தால் யாருக்கு பயன், என்ன நன்மை என்பதை மட்டும்தான் பார்க்க வேண்டும்
காங்கிரஸ் ஆட்சியில் தோற்றுப்போன தேசிய ஊரக வேலைவாய்பு திட்டத்தை நாங்கள் சரிசெய்து அமல்படுத்தி வருகிறோம்.
நம் நாட்டை பீடித்திருக்கும் மிகப்பெரிய வியாதியான ஊழலை ஒழிப்பதில் பாரபட்சம் இருக்காது. யாரையும் பழிவாங்கவும் மாட்டோம். அதே நேரத்தில் தவறு செய்தவர்களை தப்பிக்க விடவும் மாட்டோம்.
கருப்பு பணத்தை மீட்பதில் உள்ள தடைகளை தகர்க்கும் முயற்சியில் பெரும் சிக்கலை நாங்கள் சந்தித்து கொண்டிருக்கின்றோம். கண்டிப்பாக விரைவில் கருப்புப்பணத்தை மீட்டுவிடுவோம்.