இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்கிறது. ஐ.நா பொருளாதார அமைப்பு தகவல்
உலகில் மற்ற நாடுகளை விட பொருளாதாரத்தில் மிகவும் வேகமாக வளரும் நாடாக இந்தியா இருக்கும் என ஐ.நா.வின் பொருளாதார அறிக்கை தெரிவித்துள்ளது. இதனால் இந்தியாவில் அடுத்த சில ஆண்டுகளில் முதலீடுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஐ.நாவிற்கான தெற்கு ஆசிய பொருளாதார அமைப்பின் தலைவர் நாகேஷ் குமார் நேற்று பத்திரிகையாளர்களிடம் பேசியபோது, ”சீனா போன்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் கல்வி, உள்கட்டமைப்பு ஆகிய துறைகளுக்கு செலவு செய்வது மிகவும் குறைவாக உள்ளது. இந்தத் துறைகளில் முதலீடு செய்வதால் பொருளாதாரம் வளர்ச்சியடைவது மட்டுமன்றி, நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும்” என்று கூறினார்.
ஐ.நா.வின் தெற்கு ஆசிய நாடுகளுக்கான பொருளாதார அமைப்பு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது, ”நடப்பாண்டில் உலக அளவில் பொருளாதாரத்தில் மிகவும் வேகமாக வளரும் நாடாக இந்தியா இருக்கும். அடுத்த இரண்டு ஆண்டுகளில் தெற்கு ஆசியாவில் உள்ள பெரும்பாலான நாடுகளின் பொருளாதாரம் மிகவும் வேகமாக வளரும்.
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய், உலோகங்கள் ஆகியவற்றின் விலை குறைந்ததால், இந்தியாவில் பொருளாதாரச் சூழல் மேம்பட்டுள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, 2016-ம் ஆண்டில் 7.3 சதவீதமாகவும், 2017-ம் ஆண்டில் 7.5 சதவீதமாகவும் இருக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.