இலங்கைக்கு இந்தியா இலவசமாக அளித்த ரோந்துக்கப்பலின் பின்னணி?

இலங்கைக்கு இந்தியா இலவசமாக அளித்த ரோந்துக்கப்பலின் பின்னணி?

ship copyஇலங்கைக் கடற்படைக்கு குத்தகை அடிப்படையில் கொடுக்கப்பட்ட இந்தியக் கடலோரக் காவல்படைக்குச் சொந்தமான “வராஹா’ என்ற ரோந்துக் கப்பல், அந்த நாட்டு அரசிடம் முழுமையாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. சமீப காலங்களில் இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடல்சார் குற்றங்களைத் தடுக்கும் நடவடிக்கையில் இலங்கை கடற்படை சிறப்பாக செயல்பட்டதால் இந்த ரோந்துக் கப்பல் அந்நாட்டுக்கு இலவசமாக அளிக்கப்பட்டதாக இந்திய பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் ஒன்றில் கொழும்பில் உள்ள இந்தியத் தூதர் ஒய்.கே. சின்ஹா மற்றும் இலங்கை பாதுகாப்புத் துறைச் செயலர் பி.எம்.யு.டி. பஸ்நாயகே ஆகியோர் கையெழுத்திட்டனர்.

1992-ஆம் ஆண்டில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த கப்பல், 75 மீட்டர் நீளம், 11 மீட்டர் அகலம் கொண்டது. தொடக்கத்தில் இந்தியக் கடல் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்த கப்பல் பின்னர் கடந்த 2006-ஆம் ஆண்டில் இலங்கை அரசின் வேண்டுகோளுக்கிணங்க அந்நாட்டுக் கடற்படையின் சேவைக்காக குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டது. குத்தகைக்கு இந்த கப்பலை பெற்றதும் “சாகரா’ என இலங்கைக் கடற்படை பெயரை மாற்றியது.

விடுதலைப்புலிகளுடன் நடந்த உள்நாட்டுப் போரின் போது இந்தக் கப்பல் இலங்கை கடற்படைக்கு பேருதவியாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்ட இந்த ரோந்துக் கப்பலை இலங்கை நாட்டுக்கே இலவசமாக வழங்க மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசு முடிவு செய்தது. இதையடுத்து, “வராஹா’ என பெயர் சூட்டப்பட்டு முறைப்படி இலங்கைக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படைக்கு இந்தியா இந்த கப்பலை வழங்கியது குறித்து எந்தவித தகவலையும் மத்திய அரசு தெரிவிக்கவில்லை. தமிழக அரசியல் கட்சிகளின் எதிர்ப்பை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதால் மத்திய அரசு இதை மூடி மறைத்ததாக கூறப்படுகிறது. ஆயினும் இந்த கப்பல் ஒப்படைப்பு நிகழ்வு தொடர்பான தகவலை இலங்கை பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ளதால் தற்போது இந்த விஷயம் வெளிச்சதுக்கு வந்துள்ளது. 

Leave a Reply