இந்தியா, இந்து பாகிஸ்தானாக மாறிவிடும். சசிதரூர் எச்சரிக்கை

இந்தியா, இந்து பாகிஸ்தானாக மாறிவிடும். சசிதரூர் எச்சரிக்கை

நேற்று கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் நடந்த ஒரு கருத்தரங்கில் திருவனந்தபுரம் எம்.பி.யும் காங்கிரஸ் பிரமுகருமான சசிதரூர் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். இந்த கருத்தரங்கில் அவர் பேசியதாவது:-

இந்தியாவில் விரைவில் நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் இந்தியா, இந்து பாகிஸ்தானாக மாறிவிடும். இதற்கான நடவடிக்கைகளை பாரதிய ஜனதா கட்சி செய்து வருகிறது. இப்போது பாராளுமன்ற மேல் சபையில் 3-ல் 2 பங்கு மெஜாரிட்டி இல்லாததால் இந்த நடவடிக்கையை அவர்களால் செயல்படுத்த முடியவில்லை.

இதனை நடைமுறைபடுத்த அவர்கள் முயற்சி மேற்கொண்டு உள்ளனர். இப்போது அவர்கள் 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஆட்சி செய்து வருகிறார்கள். இதன் மூலம் மேல்சபையில் தங்களின் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சிக்கிறார்கள்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முன்னோடிகள் சாவர்கர் என்பவர் தான் இந்துத்துவா என்ற கோ‌ஷத்தை எழுப்பியவர். பிரதமர் நரேந்திரமோடி பெரிதும் மதிக்கும் இன்னொரு தலைவர் தீன்தயாள்உபாத்தியாயா என்பவர் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை விமர்சித்தவர்.

இந்திய அரசியல் அமைப்பு சட்டம் முழுக்க முழுக்க மேற்கத்திய கருத்துகளால் ஆனது என்கிறார்கள். 2-வதாக அவர்கள் இந்த சட்டம் தேசத்தை பற்றிய தவறான கருத்துகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய நாட்டின் எல்லைகளை வரையறுத்து சட்டம் உள்ளது. இது தவறு என்று அவர்கள் கூறுகிறார்கள்.

தேசம் என்பது மக்களை குறிக்கிறது. மக்கள் என்றால் அவர்கள் இந்துக்கள். மற்றவர்கள் அதாவது கிறிஸ்தவர்கள், முஸ்லீம்களை கொள்ளையர்களாகவும், திருடர்களாகவும் சித்தரிக்கிறார்கள். இது அவர்களின் நிலைப்பாடு. இந்தியாவில் கடந்த 2004-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான போது வளைகுடா நாடுகளுக்கு ஐக்கிய நாட்டு சங்கத்தின் பிரதிநிதியாக நான் சென்றிருந்தேன்.

அப்போது அவர்கள் இந்தியாவில் நடந்த ஆட்சி பற்றி கேட்டனர். அந்த தேர்தலில் இத்தாலியைச் சேர்ந்த பெண்ணும், கத்தோலிக்க மதத்தைச் சார்ந்தவருமான சோனியா தலைமையிலான கட்சி ஆட்சியை பிடித்தது. அவர் சீக்கிய மதத்தைச் சேர்ந்த மன்மோகன்சிங்கை பிரதமர் ஆக்கினார். அவருக்கு முஸ்லீம் மதத்தைச் சேர்ந்த அப்துல்கலாம் பதவி பிரமாணம் செய்து வைத்தார். நாங்கள் யாரையும் நிர்ப்பந்திப்பதில்லை. இது தான் இந்தியா என்று நான் அப்போது அவர்களிடம் தெரிவித்தேன். இந்தியாவில் மதசார்பின்மை என்பது மதங்களில் இருந்து விலகி இருப்பது அல்ல.

Leave a Reply