மதுரை: மதுரை எல்லீஸ்நகரை சேர்ந்த வக்கீல் ராய்ஸ் இமானுவேல், ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு:இலங்கையில் நவ. 15 முதல் 17ம் தேதி வரை காமன்வெல்த் மாநாடு நடைபெறுகிறது. இந்த காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது என மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக சட்டசபையில் அக். 24ம் தேதி ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை மத்திய கேபினட் செயலாளருக்கு, தமிழக சட்டமன்ற செயலாளர் அன்றே அனுப்பியுள்ளார். ஆனால், அந்த தீர்மானத்தின் மீது மத்திய அரசு இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கும் மத்திய அரசு பதில் தெரிவிக்கவில்லை. எனவே, இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க தடை விதிக்க வேண்டும். காமன்வெல்த் மாநாட்டிற்கு இந்தியாவில் இருந்து பிரதிநிதிகள் குழு அனுப்பக்கூடாது என உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.மனுவை நீதிபதிகள் ஜெய்சந்திரன், வைத்தியநாதன் விசாரித்தனர். விசாரணையை இன்றைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வால் முன் இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.