வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முத்ரா திட்டத்தின் கீழ் குறைந்த வட்டியில் கடனுதவி. அருண்ஜெட்லி தகவல்
சமீபத்தில் சென்னை உள்பட தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாக பெருமளவில் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களில் உள்ள பகுதிகளை பார்வையிடுவதற்காக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி சென்னை வந்தார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர் நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி ஒன்று நேற்று சென்னை, அண்ணாமலைபுரத்தில் உள்ள இமேஜ் ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அருண் ஜெட்லி கலந்து கொண்டு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடனுதவி வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், ”வருங்காலங்களில் இதுபோன்ற பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். அதற்காக இந்தியாவை பாதுகாப்பான காப்பீடு நாடாக உருவாக்க வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் சில வாரங்களில் கடனுதவிகள் வழங்கப்பட்டு விடும். காப்பீட்டு நிறுவனங்களை போல், வங்கிகளும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடனுதவி அளிக்க வேண்டும்” என்றார்.
இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் அமைச்சர் அருண்ஜெட்லி தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து பேசினார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது, ”வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காப்பீடு மற்றும் கடன் வழங்குவது தொடர்பாக அனைத்து காப்பீடு நிறுவனங்கள், 17 தனியார் மற்றும் 27 பொதுத்துறை வங்கிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இதுவரை 11 ஆயிரம் கோரிக்கைகள் இழப்பீடு கேட்டு, காப்பீடு நிறுவனங்களுக்கு வந்துள்ளது. அவர்களுக்கான காப்பீட்டு பலன்களை 4 வாரங்களுக்குள் அளிக்க அளிக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
அதேபோல், வங்கிகள் சார்பிலும் மக்களுக்கான தேவைகளை விரைவில் தர நடவடிக்கை எடுக்கப்படும். வங்கிகள் சார்பில் வழங்கப்படும் உதவிகளை ஆய்வு செய்ய டெல்லியில் இருந்து குழு அனுப்பி வைக்கப்படும்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதமரின் காப்பீடு திட்ட உறுப்பினர்களும் வெள்ள நிவாரணம் பெறலாம். அதேபோல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முத்ரா திட்டத்தின் கீழ் குறைந்த வட்டியில் கடனுதவி அளிக்கப்படும்”
இவ்வாறு அருண்ஜெட்லி கூறினார்
English Summary:India should be turned into more insured society: Arun Jaitley