நாகலாந்து தீவிரவாதிகளுடன் வரலாற்று சிறப்பு வாய்ந்த சமாதான ஒப்பந்தம் கையெழுத்து. பிரதமர் மோடி மகிழ்ச்சி
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பில் இருந்தே அதாவது சுமார் 70ஆண்டுகாலம் தங்கள் உரிமைகளுக்காக போராடி வந்த நாகலாந்து தீவிரவாத இயக்கம் ஒருவழியாக சமாதான ஒப்பந்தத்தில் நேற்று கையெழுத்திட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த இந்த சமாதான ஒப்பந்தம் வரலாற்று சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அகண்ட நாகாலாந்து’ என்ற தனி நாடு கோரிக்கையுடன் கடந்த 70 ஆண்டுகளாக வன்முறைப் பாதையில் போராடி வந்த தீவிரவாத அமைப்பான நாகாலாந்து தேசிய சோஷலிச கவுன்சிலுடன் பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் மத்திய அரசு அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டது. இதன் மூலம் அரை நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக தனி நாடு கோரி வந்த இந்த இயக்கத்தின் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. எனவே இனிமேல் நாகலாந்து மாநிலத்தில் அமைதி திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகாலாந்தில், கடந்த பல ஆண்டுகளாக இந்திய ராணுவத்துக்கும் தீவிரவாதிகளுக்கும், இடையே சண்டை நடந்து வந்தது. இருதரப்புக்கும் இடையே 1997 ஆம் ஆண்டு சமாதான பேச்சுவார்த்தை தொடங்கியது. ஆனால், முக்கிய தீவிரவாத அமைப்பான நாகாலாந்து தேசிய சோஷலிஸ்ட் கவுன்சில் எழுப்பிய சில நிபந்தனைகளால் பேச்சுவார்த்தை தடைபட்டது.
இந்நிலையில் மத்தியில் கடந்த ஆண்டு ஆட்சி மாற்றம் நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பதவி ஏற்ற பின்னர் மீண்டும் சமாதான பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது. இதன் விளைவாக, மத்திய அரசுக்கும், நாகாலாந்து தேசிய சோஷலிஸ்ட் கவுன்சிலுக்கும் இடையே வரலாற்று சிறப்புமிக்க சமாதான ஒப்பந்தம் நேற்று கையெழுத்திடப்பட்டது. டெல்லியில், பிரதமர் இல்லத்தில், பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில், இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
மத்திய அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தி வரும் அதிகாரி ஆர்.என்.ரவி, மத்திய அரசு சார்பாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். நாகாலாந்து தேசிய சோஷலிஸ்ட் கவுன்சில் சார்பில் அதன் பொதுச்செயலாளர் துயிங்கலங் முய்வா கையெழுத்திட்டார். அதன்பின் அவர், பிரதமர் மோடிக்கு பாரம்பரிய நாகாலாந்து சட்டையையும், கருப்பு-சிவப்பு சால்வையையும் பரிசளித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும்போது, ”இது, பிரச்னையின் முடிவு மட்டுமல்ல, புதிய எதிர்காலத்தின் தொடக்கமும் ஆகும். சமத்துவம், மரியாதை, நம்பிக்கை ஆகியவற்றை கடைபிடித்தால், என்னவெல்லாம் சாதிக்கலாம் என்பதற்கு இதுவே உதாரணம். நாகாலாந்தின் அமைதி, பாதுகாப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றத்துக்கு நான் முன்னுரிமை அளிப்பேன்.
ஒருவரையொருவர் புரிந்து கொள்ளாததால், நாகாலாந்து தீவிரவாத பிரச்னை இத்தனை ஆண்டுகளாக நீடித்து வருகிறது. பலர் பலி வாங்கப்பட்டு விட்டனர். இதற்கு முடிவு கட்டும்வகையில், இந்த வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு உள்ளது. அமைதி முயற்சிகளுக்கு அபரிமிதமான ஆதரவு அளித்த நாகா மக்களை நான் பெரிதும் பாராட்டுகிறேன்.
இங்கு கையெழுத்திட்ட முய்வா, அறிவுக்கூர்மையையும், துணிச்சலையும் காண்பித்துள்ளார். தீவிரவாதம் முடிவுக்கு வருவதை நான் வரவேற்கிறேன். தவறான பாதையில் சென்றவர்கள், சரியான பாதைக்கு திரும்புவார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.