ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவன் விண்வெளி மையத்தில் இருந்து “IRNSS 1D’ என்ற செயற்கைக்கோளுடன் PSLV 27 ராக்கெட் நேற்று மாலை 5.19 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதனால் விண்வெளி மையத்தின் விஞ்ஞானிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திட்டமிட்டபடி சரியான நேரத்தில் ஏவுதளத்தில் இருந்து சீறிப்பாய்ந்த ராக்கெட் 19 நிமிஷம் 25 நொடிகளில் ராக்கெட் பாகங்கள் ஒவ்வொன்றும் தனித் தனியாக பிரிந்து புவி வட்டப்பாதையை செயற்கைக் கோள் அடைந்தது. மொத்தம் 7 செயற்கைக்கோள்கள் கொண்ட இந்த தொகுப்பில் ஏற்கெனவே 3 செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டுள்ள நிலையில் நேற்று 4-ஆவது செயற்கைக்கோளும் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
முதலில் இந்த ராக்கெட் கடந்த 9-ஆம் தேதி ஏவப்படுவதாக இருந்தது. ஆனால், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏவப்படும் தேதி திடீரென தள்ளி வைக்கப்பட்டு நேற்றைய தினம் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
இந்தச் செயற்கைகோள் இந்தியாவில் வசிப்பவர்களுக்கு மட்டுமல்லாமல், இந்திய எல்லையைச் சுற்றி 1,500 கி.மீ. தொலைவில் உள்ள தெற்கு ஆசியாவில் இருப்பவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த செயற்கைக்கோள் போக்குவரத்துக்கான தகவல்களை வழங்குவதோடு, ராணுவம், விமானப்படை, கப்பல்படைக்கும் துல்லியமான தகவல்களை இந்த அமைப்பின் மூலம் வழங்க முடியும்.
சமீபத்தில் இஸ்ரோ தலைவராக பதவியேற்றுக்கொண்ட கிரண்குமார் பொறுப்பேற்றவுடன் விண்ணில் செலுத்தப்படும் முதல் செயற்கைக்கோள் இது என்பது குறிப்பிடத்தக்கது.