தமிழக மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை நீதிமன்ற அளித்த தூக்குத் தண்டனை தீர்ப்பை ரத்து செய்யத் தேவையான சட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாகவும், விரைவில் அவர்களை மீட்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்ரும் பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை எதிர்த்து, இலங்கை உயர் நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்யப்பட உள்ளது. இலங்கை அதிபரின் உயர்மட்ட சட்ட ஆலோசகர்களில் ஒருவரான அனில் சில்வா என்ற வழக்கறிஞரை, மீனவர்கள் தரப்பில் இருந்து வாதாட மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.
கடந்த 2011ம் ஆண்டு போதைப் பொருள் கடத்தல் நடைபெற்றதாகக் கூறப்படும் தீவுப் பகுதிக்கு, தமிழக மீனவர்கள் இருந்த படகு செல்லவில்லை என்பதை ஜி.பி.எஸ். கருவியில் பதிவான தகவல்கள் உறுதி செய்வதாகவும், எனவே, மீனவர்கள் மீதான வழக்கு பொய்யானது என்பதை நிரூபிக்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். எனவே, மீனவர்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து மீனவ அமைப்பினர் போராட்டம் நடத்துவதைக் கைவிட வேண்டும் என்றும் தமிழிசை சவுந்தர்ராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.