இந்தியா Vs ஆஸ்திரேலிய மோதும் 2வது ஒருநாள் போட்டி

இந்தியா , ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டி, ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

இந்தியா வந்துள்ள ஆஸி. அணி ஒரு டி20 மற்றும் 7 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. ராஜ்கோட்டில் நடந்த டி20 போட்டியில் இந்திய அணி அபாரமாக வென்ற நிலையில், புனே மைதானத்தில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலியா 72 ரன் வித்தியாசத்தில் வென்று 1,0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்த நிலையில், 2வது ஒருநாள் போட்டி ஜெய்ப்பூரில் இன்று நடைபெறுகிறது. இந்திய அணியின் பேட்டிங் வரிசை பலமாக அமைந்திருந்தாலும், பந்துவீச்சு கவலை அளிப்பதாகவே உள்ளது. டி20 போட்டியில் 200 ரன்னுக்கு மேலாகவும் முதல் ஒருநாள் போட்டியில் 300 ரன்னுக்கு அதிகமாகவும் விட்டுக் கொடுத்ததால், பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.

உலக சாம்பியன், நம்பர் 1 அணி என்ற அந்தஸ்துடன் சொந்த மண்ணில் விளையாடும் இந்தியா, இந்த போட்டியில் வென்று 1,1 என சமநிலை ஏற்படுத்தும் முனைப்புடன் களமிறங்குகிறது. அதே சமயம், முதல் போட்டியில் வென்றதால் ஆஸி. வீரர்கள் உற்சாகமாக உள்ளனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக இந்த மைதானத்தில் அதிக போட்டிகளில் விளையாடிய அனுபவம் ஷேன் வாட்சன், ஜேம்ஸ் பாக்னர் இருவருக்கும் வெகுவாக கை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா: டோனி (கேப்டன்), ஷிகார் தவான், ரோகித் ஷர்மா, விராத் கோஹ்லி, யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, அம்பாதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, ஆர்.அஷ்வின், இஷாந்த் ஷர்மா, புவனேஷ்வர் குமார், வினய் குமார், அமித் மிஷ்ரா, ஜெய்தேவ் உனத்காட், முகமது ஷமி.

ஆஸ்திரேலியா: ஜார்ஜ் பெய்லி (கேப்டன்), நாதன் கோல்ட்டர் நைல், சேவியர் தோஹர்டி, ஜேம்ஸ் பாக்னர், கல்லம் பெர்குசன், ஆரோன் பிஞ்ச், பிராட் ஹாடின், மோய்சஸ் ஹென்ரிக்ஸ், பிலிப் ஹியூஸ், மிட்செல் ஜான்சன், கிளென் மேக்ஸ்வெல், கிளின்ட் மெக்கே, ஆடம் வோஜஸ், ஷேன் வாட்சன்.

Leave a Reply