இந்தியா – தென் ஆப்ரிக்க அணிகளிடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்கிறது. முதல் டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க், நியூ வாண்டரர்ஸ் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாசில் வென்று முதலில் பேட் செய்த இந்தியா, முதல் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 255 ரன் எடுத்திருந்தது. விராத் கோஹ்லி 119 ரன் விளாசி ஆட்டமிழந்தார். ரகானே 43, கேப்டன் டோனி 17 ரன்னுடன் நேற்று ஆட்டத்தை தொடர்ந்தனர்.
டோனி 19, ரகானே 47 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். ஒரு முனையில் அஷ்வின் உறுதியாக நிற்க ஜாகீர், இஷாந்த், ஷமி ஆகியோர் டக் அவுட் ஆகி அணிவகுத்தனர். இந்தியா முதல் இன்னிங்சில் 280 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. ஒரு கட்டத்தில் 5 விக்கெட் இழப்புக்கு 264 ரன் எடுத்திருந்த இந்தியா, மேற்கொண்டு 16 ரன் மட்டுமே சேர்த்து கடைசி 5 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் பிலேண்டர் 4, மார்னி மார்க்கெல் 3, ஸ்டெயின், காலிஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சை தொடங்கியது.
தொடக்க வீரர்களாக கேப்டன் கிரீம் ஸிமித், அல்விரோ பீட்டர்சன் களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 37 ரன் சேர்த்தது. அல்விரோ 21 ரன் எடுத்து இஷாந்த் வேகத்தில் எல்பிடபுள்யு ஆகி வெளியேறினார். அடுத்து ஸ்மித்துடன் அம்லா ஜோடி சேர்ந்தார். இருவரும் நம்பிக்கையுடன் விளையாடி ரன் சேர்த்தனர். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 93 ரன் சேர்த்து மிரட்டியது. தென் ஆப்ரிக்கா மிகப் பெரிய ஸ்கோரை நோக்கி முன்னேறிய நிலையில், இந்திய பந்துவீச்சாளர்கள் புது உத்வேகத்துடன் துல்லியமாகப் பந்துவீசி அசத்தினர். குறிப்பாக, இஷாந்த் பந்துவீச்சில் அனல் பறந்தது. அம்லா 36, காலிஸ் (0) இருவரும் இஷாந்த் வேகத்தில் வெளியேறினர்.
ஸ்மித் 68 ரன் எடுத்து ஜாகீர் வேகத்தில் எல்பிடபுள்யு ஆனார். அடுத்து வந்த அதிரடி வீரர்கள் டுமினி, டிவில்லியர்ஸ் இருவரும் முகமது ஷமி வேகத்தில் பலியாகினர். 38 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 130 ரன் எடுத்திருந்த தென் ஆப்ரிக்கா, மேற்கொண்டு 16 ரன் மட்டுமே சேந்த நிலையில் 5 முக்கியமான விக்கெட்டுகளை பறிகொடுத்து திணறியது. இதனால் இந்திய அணியின் கை ஓங்கியது. எனினும், டு பிளெஸ்சிஸ் – பிலேண்டர் ஜோடியின் பொறுப்பான ஆட்டத்தால் அந்த அணி சரிவிலிருந்து ஓரளவு மீண்டது. இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் தென் ஆப்ரிக்கா 66 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 213 ரன் எடுத்துள்ளது. டுபிளெஸ்சிஸ் 17 ரன், பிலேண்டர் 48 ரன்னுடன் (76 பந்து, 5 பவுண்டரி) களத்தில் உள்ளனர