தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி. இந்தியா அதிர்ச்சி தோல்வி
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று டி-20 போட்டியில் விளையாடி இரண்டில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நேற்று கான்பூரில் தொடங்கியது.
நேற்றைய முதல்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி, முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அந்த அணி 5 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 303 ரன்கள் குவித்தது. தென்னாப்பிரிகா கேப்டன் டிவில்லியர்ஸ் 104 ரன்கள் அடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். டிபிளஸ்ஸிஸ் 62 ரன்களும், ஆம்லா 37 ரன்களும் எடுத்தனர்.
304 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்கம் சூப்பராக இருந்தது. தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 150 ரன்களும், ரஹானே 60 ரன்களும் எடுத்தனர். ஆனால் அதன்பின்னர் ஆடிய இந்திய வீரர்கள் பொறுப்பற்ற முறையில் ஆடியதால், 50 ஓவர்களில் இந்தியா 298 ரன்கள் மட்டுமே எடுத்து 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 50வது ஓவரில் 11 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்திய அணி அந்த ஓவரில் இரண்டு விக்கெட்டுக்களை இழந்து 5 ரன்களை மட்டுமே எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.