இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையே 2 டெஸ்ட் போட்டிகள் நடந்தது. இரண்டிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி இன்னிங்ஸ் தோல்வி அடைந்து தொடரை இழந்தது. இந்நிலையில், இந்திய அணியுடன் வெஸ்ட் இண்டீஸ் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது.

இதில் முதல் ஒருநாள் போட்டி கொச்சியில் நேற்று பகல், இரவு ஆட்டமாக நடந்தது. ஏற்கனவே டெஸ்ட் தொடரை வென்று அசத்திய மகிழ்ச்சியில் இந்திய அணி களம் இறங்கியது. டாஸ் வென்று வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய அந்த அணி 48.5 ஓவர்களில் 211 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சிறப்பாக பந்துவீசிய ஜடேஜாவும், ரெய்னாவும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

212 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் தவான் 5 ரன்னில் ஆட்டமிழந்தார். இதன் பின் ஜோடி சேர்ந்த ரோஹித் ஷர்மாவும், கோலியும் சிறப்பாக ஆடி ரன்களை குவிக்க தொடங்கினர். ரோஹித் ஷர்மா 72 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய கோலியும் 86 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதியில் 35.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்து இலக்கை எட்டி வெற்றி பெற்றது. 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியின் விவியன் ரிச்சட்ஸ் 114-வது போட்டியில் 5000 ரன்களைக் கடந்தது உலக சாதனையாக இருந்தது. இந்த சாதனையை விராத் கோலி இன்றைய தனது அதே 114 ஆவது போட்டியில் 5000 ரன்களைக் கடந்து அந்த சாதனையை சமன் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply