20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா வெல்லும்.சச்சின், அஸ்வின் நம்பிக்கை
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் மார்ச் 8–ந்தேதி முதல் ஏப்ரல் 3–ந்தேதி வரை இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்காக ஒவ்வொரு நாடுகளும் தங்கள் அணியை அறிவித்து வருகிறது. இந்நிலையில் இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற வாய்ப்பு இருப்பதாக பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் கூறியுள்ளார்.
இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் சச்சின் கூறியதாவது:–
20 ஓவர் உலக கோப்பையை இந்திய அணி வெல்ல நல்ல வாய்ப்பு இருக்கிறது. அணியில் சீனியர், ஜூனியர் வீரர்கள் உள்ளனர். இதனால் அணி சமநிலையில் இருப்பதாக உணர்கிறேன். அனைவரும் திறமையுடன் விளையாடக் கூடியவர்கள்.
ஆஸ்திரேலிய பயணத்தில் புதுமுக வீரர் பும்ரா மிகவும் சிறப்பாக பந்து வீசினார். இதேபோல் அனுபவம் வாய்ந்த நெக்ராவும் நன்றாக செயல்பட்டார். இதனால் எல்லா வகையிலும் இந்திய அணி நன்றாக இருக்கிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரில் இந்திய வீரர்களின் ஆட்டம் மிகவும் அற்புதமாக இருந்தது. நம்ப முடியாத அளவுக்கு பிரமிப்பு ஏற்படுத்தும் வகையில் ஆடினார்கள். கடைசி ஆட்டத்தில் கடைசி பந்தில் அணி வெற்றி பெற்றதை மனைவி, மகனுடன் டெலிவிஷனில் பார்த்தேன்.
ஆஸ்திரேலிய மண்ணில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி சொந்த மண்ணில் திறமையை வெளிப்படுத்தி கோப்பையை வெல்ல வாய்ப்பு இருக்கிறது.
இவ்வாறு தெண்டுல்கர் கூறியுள்ளார்.
இதேபோல் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளார் அஸ்வினும் 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை வெல்லும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.