இந்தியா மற்றும் இலங்கை நாடுகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி மிக அபாரமாக விளையாடி 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என்ற முன்னிலையில் உள்ளது.
நேற்று அகமாதாபாத் நகரில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இலங்கை அணி 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 274 ரன்கள் எடுத்தது. சங்கரகரா 61 ரன்களும், மாத்யூஸ் 92 ரன்களும் எடுத்தனர்.
பின்னர் 275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பேட்டிங் செய்த இந்திய அணி தொடக்கத்திலேயே ரஹானா விக்கெட்டை இழந்தாலும், இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தவான் மற்றும் ராயுடு மிகவும் பொறுப்புடன் விளையாடினர். தவான் 79 ரன்களும், ராயுடு 121 ரன்களும் குவித்தனர். விராத் கோஹ்லி 49 ரன்கள் எடுத்தார். இறுதியில் இந்திய அணி 44.3 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 275 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ராயுடு ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.