ஒருநாள், டெஸ்ட் போட்டி மற்றும் இருபது ஓவர்கள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. சமீபத்தில் கொச்சி நகரில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி நேற்று டெல்லியில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் 48 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோல்வி அடைந்தது.
டெல்லி பெரோஸ் கான் மைதானத்தில் நேற்று நடந்த 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கேப்டன் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி பேட்ஸ்மேன்களில் அபார விளையாட்டு காரணமாக இந்திய அணி 7 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 263 ரன்கள் எடுத்தது . விராத் கோஹ்லி மற்றும் சுரேஷ் ரெய்னா தலா 62 ரன்கள் எடுத்து இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்த உதவினர் மேலும் தோனி அதிரடியாக விளையாடி ஆடி 51 ரன்கள் குவித்தார்.
264 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியின் தொடக்கம் நன்றாக இருந்தாலும், பின்னர் இறங்கிய பேட்ஸ்மேன்களின் சொதப்பலான ஆட்டத்தால் 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தனர். வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஸ்மித் மட்டும் மிக அபாரமாக விளையாடி 97 ரன்கள் எடுத்தார். இறுதியைல் 46.3 ஓவர்களில் மேற்கிந்திய தீவுகள் அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 215 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய பவுலர் முகம்மது ஷமி 4 விக்கெட்டுக்களை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்றார். மேலும் ஜடேஜா மூன்று விக்கெட்டுக்களையும், மிஷ்ரா இரண்டு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினார்கள்.
இந்தியா மேற்கிந்திய தீவுகள் அணிகளிடையே மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரும் 14ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெறும்.