உத்தரப்பிரதேசத்தில், இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், விமானப்படை அதிகாரிகள் உள்பட 7 பேர் பரிதாபமாக பலியாகினர்.
இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று நேற்று பரேலியிலிருந்து இருந்து அலகாபாத் நோக்கி சென்றது. அந்த ஹெலிகாப்டர் சிதாபுர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென விபத்துக்குள்ளானது.
விபத்திற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. ஆனால் விபத்து நடப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்னர் ஹெலிகாப்டரை இயக்கிய பைலட் அவசர அழைப்பு விடுத்ததாகவும், ராடார் கருவியின் தொடர்பு துண்டிக்கப்பட்டதால், அவருடைய அழைப்பை கட்டுப்பாட்டு அறையில் இருந்த அதிகாரிகள் அறியமுடியாமல் போனதாகவும் கூறப்படுகிறது.
உத்தரப்பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோ அருகே ஹெலிகாப்டர் விழுந்து கிடப்பதாகவும், மீட்புப்படையினர் அந்த பகுதியை நோக்கி விரைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து விமானப்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.