இந்திய போர் விமானங்களில் பெண் விமானிகள். விமானப்படை தளபதி தகவல்
இந்திய போர் விமானங்களில் இதுவரை ஆண் வீரர்கள் மட்டுமே பணிபுரிந்து வரும் நிலையில் விரைவில் பெண் விமானிகளும் போர் விமானங்களில் ஈடுபடுத்தப்படுவார்கள் என இந்திய விமானப்படைத் தளபதி அரூப் ராகா இன்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா போன்ற நாடுகளில் இளம்பெண்கள் போர் விமானங்களில் பணிபுரிந்து வருகின்றனர். ஆனால் இந்தியாவில் இதுவரை பெண்கள், போர் விமானங்களில் பணியில் அமர்த்தப்படவில்லை. இந்நிலையில் இந்திய விமானப் படையின் 83-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு அணிவகுப்பு நிகழ்ச்சி ஒன்று இன்று டெல்லியில் நடைபெற்றது. இதில் இந்திய விமானப்படைத் தளபதி அரூப் ராகா பங்கேற்றார்.
அப்போது அவர் ராணுவ வீரர்களின் மத்தியில் பேசியபோது, “தற்போது, இந்திய விமானப் படையின் போக்குவரத்து விமானம் மற்றும் ஹெலிகாப்டர்களில் மட்டுமே பெண் விமானிகள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இந்திய இளம் பெண் விமானிகளின் திறமையை உலகறியச் செய்யும் வகையில், அவர்களை விரைவில் போர் விமானங்களில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறினார் தற்போது இந்திய விமானப் படையில் சுமார் 300 பெண் விமானிகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.