இலங்கையில் தூக்கு தண்டனை பெற்ற 5 தமிழ் மீனவர்களுடன் இந்திய தூதர் திடீர் சந்திப்பு.

yash sinhaஇலங்கை நீதிமன்றத்தினால் தூக்குதண்டனை விதிக்கப்பட்டுள்ள ஐந்து தமிழக மீனவர்களை இலங்கைக்கான இந்தியத் தூதர் யஷ் சின்ஹா நேற்று திடீரென சந்தித்துப் பேசினார். மீனவர்களை தண்டனையில் இருந்து காப்பாற்றும் அனைத்து  நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று அவர் செய்தியாளர்களிடம் உறுதியளித்தார்.

இந்த சந்திப்பு குறித்து இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் சையது அக்பருதீன் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.  இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 5 பேர்களை இந்தியத் தூதர் யஷ் சின்ஹா, நேற்று சந்தித்துப் பேசியதாகவும், மீனவர்கள் ஐவரும் நல்ல உடல் நலத்துடன் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு தேவையான உணவு, உடைகள் போன்ற பொருள்களை இந்திய தூதர் வழங்கி நேரில் ஆறுதல் கூறியதாகவும் கூறப்படுகிறது.

இந்திய தூதர் தங்களை நேரில் சந்தித்துப் பேசியதால் மகிழ்ச்சியடைந்த மீனவர்கள், யஷ் சின்ஹாவுக்கு நன்றி தெரிவித்ததாகவும், தாங்கள் கண்டிப்பாக காப்பாற்றப்படுவோம் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் சிறையில் இருக்கும் ஐந்து மீனவர்களும் தங்கள் உறவினர்களிடம் தொலைபேசி மூலம் பேசுவதற்கு சிறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுமதி பெற்று தரப்படும் என இந்திய தூதர் யஷ் சின்ஹா உறுதியளித்ததாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்நிலையில், மீனவர்களை மீட்பதற்கு மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள அதிமுக, திமுக, பாமக, மதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

Leave a Reply