அமெரிக்க பல்கலைக்கழகத்திற்கு ரூ.660 கோடி நன்கொடை கொடுத்த இந்திய தம்பதி
நியூயார்க்கில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றுக்கு அமெரிக்காவில் வாழும் இந்திய தம்பதி ரூ.660 கோடி நன்கொடை வழங்கியுள்ளனதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்திய வம்சாவழி தம்பதியான ரஞ்சன் தாண்டன் – சந்திரிகா தாண்டன் ஆகியோர் பல வருடங்களாக வாழ்ந்து வருகின்றனர். சந்திரிகா தாண்டன் பெப்சிகோ நிறுவன தலைமை செயல் அதிகாரி இந்திரா நூயியின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இவர் ஒரு சிறந்த பாடகியும் ஆவார். இவர் பாடிய பாடல் ஒன்று கிராமி விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. மேலும் இவர் பல நிறுவனங்களின் தலைவராகவும் இருக்கிறார்.
நியூயார்க் பல்கலைக்கழக கல்வி நிறுவனங்களின் நிர்வாக குழுவிலும் இடம் பெற்றுள்ள இவரது கணவர் ரஞ்சன் தாண்டன் ஒரு என்ஜினீயர். ஹார்வர்டு வர்த்தக கல்லூரியில் படித்து பட்டம் பெற்று சொந்தமாக நிறுவனங்கள் நடத்தி வருகிறார். இந்நிலையில் இந்த தம்பதியினர் நியூயார்க் பல்கலைக்கழகத்தின் என்ஜினீயரிங் பள்ளிக்கு ரூ.660 கோடி அதாவது 100 மில்லியன் அமெரிக்க டாலர் நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
இத்தொகை பள்ளியில் புதிய கட்டிடங்கள் கட்டவும், கல்வி மேம்பாட்டுக்கும் செலவிடப்பட உள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகிகள் தெரிவித்தனர். அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்றுக்கு இவ்வளவு பெரிய தொகையை இதற்கு முன்னர் இந்தியர்கள் யாரும் நன்கொடையாக கொடுத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.