சென்னை சாந்தோம் இந்தியன் வங்கியின் கிளையில் நேற்று இரவு கொள்ளை முயற்சி நடந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை சாந்தோம் நெடுஞ்சாலையில் ஒரு குடியிருப்பு தளத்தின் கீழ்தளத்தில் இந்தியன் வங்கியின் கிளை உள்ளது. அதன் அருகிலேயே ஏடிஎம் மையமும் உள்ளது. நேற்று இரவு குடியிருப்பு கட்டிடத்தின் பின்பக்கமாக வந்த மர்ம ஆசாமிகள் வங்கியின் ஜன்னல் கம்பியை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். பின்னர் பணம் மற்றும் நகைகள் வைக்கப்பட்டுள்ள லாக்கர் அறைக்கு சென்ற அவர்கள் லாக்கரை உடைக்க உளியை கொண்டு அடித்து முயற்சி செய்துள்ளனர். ஆனால் லாக்கரை உடைக்கமுடியவில்லை.
இந்நிலையில் இந்த வங்கியின் மேள்தளத்தில் குடியிருந்த பெண் ஒருவர் வங்கிக்குள் ஏதோ சத்தம் கேட்டதை அறிந்து உடனடியாக மயிலாப்பூர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். போலீஸார் வருவதற்குள் கொள்ளையர்கள் தப்பித்து சென்றுவிட்டனர். ஆனால் வங்கியில் எவ்வித திருட்டும் நடக்கவில்லை என்பதை அறிந்து போலீஸார் நிம்மதி அடைந்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த வங்கி மேலாளர் ஏடிஎம் மையத்தில் இருந்த காவலாளியிடம் விசாரணை செய்தனர். ஆனால் அவர் கொள்ளை முயற்சி குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார். இப்படி ஒரு கொள்ளை முயற்சி நடந்ததை அறியாமல் காவலாளி என்ன செய்தார் என்பது மர்மமாக உள்ளது. திருடர்கள் வந்த நேரத்தில் வங்கி அலாரமும் ஒலிக்கவில்லை. கேமராவும் வேலை செய்யவில்லை. இது திருடர்களின் வேலையாகத்தான் இருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது.