கடந்த சனிக்கிழமை நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் காரணமாக நேபாள தலைநகர் காத்மண்டு 10அடி தூரம் வரை தெற்கு நோக்கி நகர்ந்துள்ளதாக பிரிட்டன் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் ஒருசில இந்திய நகரங்களும் 10அடி தூரம் நகர்ந்துள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்த நிலநடுக்கம் காரணமாக இந்தியா, நேபாளம் ஆகிய இரு நாடுகளின் கீழுள்ள பூமித் தட்டுகள் சில மீட்டர்களுக்கு நகர்ந்துள்ளதாகவும் இதனால் இவ்விரு நாடுகளுக்கும் ஏதேனும் விளைவுகள் ஏற்படுமா? என்பது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, அமெரிக்க புவியியல் ஆராய்ச்சியாளர் காலின் ஸ்டார்க் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: நேபாளத்தில் எதிர்பாராமல் நேர்ந்த நிலநடுக்கமானது மிகப் பெரிய விளைவுகளை உருவாக்கியுள்ளது. இதன் காரணமாக காத்மாண்டு, போகாரியா உள்ளிட்ட பகுதிகளின் கீழே உள்ள பூமித் தட்டு ஒருபுறமாக நகர்ந்துள்ளன.
அதேபோல, வட இந்தியாவின் சில பகுதிகள் ஒரு அடியிலிருந்து 10 அடி வரை வடக்குப்புறமாக நகர்ந்துள்ளன. பூமித் தட்டுகள் இடம்பெயர்வதை புவியியல் வல்லுநர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், நேபாளம்-திபெத் உள்ளிட்ட பகுதிகளுக்கு கீழே உள்ள பூமித் தட்டானது ஆண்டுக்கு 1.8 அங்குலம் வீதம் நகர்ந்து வருவதாகவும் ஏற்கெனவே கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.