சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்ட ஒரு தமிழர் சட்ட திருத்தம் ஒன்றால் ஆயுள்தண்டனையாக குறைக்கப்பட்டு உயிர் தப்பியுள்ளார்.
கடந்த 2008ஆம் ஆண்டு 186.62 கிராம் ஹெராயின் என்ற போதைப்பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்ட தமிழகத்தை சேர்ந்த பிரகாசம் என்பவர் மீது சிங்கப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் 2012ஆம் அக்டோபர் மாதம் தீர்ப்பு கூறப்பட்டது. இதில் போதைப்பொருள் கடத்திய குற்றம் நிரூபிக்கப்பட்டதால் பிரகாசத்திற்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது.
ஆனாலும் தூக்கு தண்டனை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் தூக்குதண்டனையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அந்நாட்டு எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கை காரணமாக சிங்கப்பூர் அரசு சமீபத்தில் ஒரு சட்ட திருத்தம் கொண்டுவந்தது. அதன்படி நீதிபதி விரும்பினால் தூக்குதண்டனையை ஆயுள்தண்டனையாகவும், கசையடி தண்டனையாகவும் மாற்றலாம் என திருத்தம் கொண்டுவரப்பட்டது.
இதன்படி தூக்குதண்டனை பெற்ற பிரகாசம் தன்னை புதிய சட்டதிருத்தத்தின்படி ஆயுள்தண்டனையாக மாற்றக்கோரி மனு செய்தார். அவரது மனு ஏற்றுக்கொள்ளப்பட்டு, அவரது தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டு அதற்கு பதிலாக ஆயுள் தண்டனையும், 15 கசையடிகளும் கொடுக்க நீத்பதி சூ ஹான் டெக் நேற்று உத்தரவிட்டார்.
தூக்கு தண்டனையில் இருந்து பிரகாசம் தப்பித்ததால் தமிழகத்தில் உள்ள அவரது குடும்பத்தினர் நிம்மதி அடைந்துள்ள்தாக தெரிவித்துள்ளனர்.