இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை. பாஜக எம்பி. அளித்த உறுதிமொழி
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் சிங்கள ராணுவத்திற்கும் இடையே கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப்போரின்போது ஏராளமான அகதிகள் தமிழகம் உள்பட இந்தியாவின் பல பகுதிகளுக்கு அகதிகளாக வந்தனர். அவர்கள் அனைவருக்கு அகதிகள் முகாம் ஏற்படுத்தி பல சலுகைகளை இந்திய அரசு வழங்கிவரும் நிலையில் விரைவில் இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் என்று பா.ஜ.க. எம்.பி. தருண் விஜய் உறுதி அளித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு இலங்கை அகதிகள் இடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
நேற்று சென்னை வந்த பாஜக எம்.பி தருண், புழல் அகதிகள் முகாமுக்கு சென்று அங்கு வாழும் இலங்கை அகதிகளை நேரில் சந்தித்து பேசினார். அவர்களுடைய குறைகளையும் கோரிக்கைகளையும் கேட்ட பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தருண் எம்.பி, ”பல ஆண்டுகாலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்த காங்கிரஸ், இலங்கை அகதிகள் விவகாரத்தில் உரிய கவனம் செலுத்தவில்லை. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்னர் தான் இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையே நல்லுறவு ஏற்பட்டு உள்ளது. இலங்கைத் தமிழர்களின் பிரச்னைகளை உணர்ச்சிப்பூர்வமாக கருதி, பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. தங்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும், வேலை வாய்ப்புகளை அளிக்க வேண்டும் என்பதே அகதிகளின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
அதனால், இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும். முகாம்களில் உள்ளோர் வலுக்கட்டாயமாக சொந்த ஊர்களுக்கு அனுப்பப்படமாட்டார்கள். அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திய பின்னர், விருப்பத்தின் பேரிலேயே அனுப்பப்படுவார்கள்.
மேலும், அகதிகள் வேலைவாய்ப்பு பெறுவதற்கான நடைமுறைகள் எளிமைப்படுத்தப்படும். அகதிகளை அரசு அதிகாரிகள் மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும். விதிமுறையை மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறினார்.