காணாமல் போன விமானத்தை தேட அமெரிக்க உள்பட 4 நாடுகளுடன் ஆலோசனை

காணாமல் போன விமானத்தை தேட அமெரிக்க உள்பட 4 நாடுகளுடன் ஆலோசனை

missing flightஇந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான டோரியர் விமான ஒன்று  கடந்த ஜூன் மாதம் 8ஆம் தேதி சென்னை அருகே மாயமானது. இந்த விமானம் காணாமல் போய் நேற்றுடன் ஒரு மாதம் ஆகியும் விமானத்தின் நிலை குறித்து ஒரு தகவலும் கிடைக்க்கவில்லை. இந்த விமானத்தில் பயணம் செய்த விமானி உள்பட மூன்று பேர்களின் குடும்பத்தினர் கொடுத்த நெருக்கடி காரணமாக தற்போது அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா மற்றும் ஜப்பான் நாடுகளின் நவீன தொழில்நுட்பத்தின் உதவியால் இந்த விமானத்தை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது,

இதுகுறித்து இந்திய கடலோர காவல் படையின் தென்மண்டல ஜ.ஜி, எஸ்.பி.சர்மா, நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

மாயமான விமானத்தை கடந்த 30 நாட்களாக இந்திய கடலோர பாதுகாப்புப்படை கப்பல்களும், இந்திய கப்பல் படையின் கப்பல்கள் மற்றும் விமானங்களும் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

நவீன தொலைத்தொடர்பு வசதிகள் கொண்ட ‘சாகர்நிதி’ என்ற கப்பலில் இருந்து தொலை தொடர்பு கருவிகள் மூலம் ‘மாயமான விமானத்தின் கருப்பு பெட்டியில் இருந்து சிக்னல்கள் வருகிறதா? என்பது குறித்து தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டது. ஆனால் சிக்னல்கள் விட்டு, விட்டு வந்ததால் நம்பகத்தன்மையான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.

தொடர்ந்து ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஒலிம்பிக் கேன்யான் கப்பல் 92 மணி நேரம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லாததால் அந்த கப்பல் தேடுதல் வேட்டையில் இருந்து விடுவிக்கப்பட்டது.

சாகர்நிதி கப்பலை திரும்ப பெற்றுவிட்டு தற்போது, ஒலிம்பிக் கேன்யான் கப்பலில் உள்ள ‘ரிமோட்லி ஆபரேட்டிங் வெசல்’ என்ற நவீன கருவியில் உள்ள ‘எக்கோ சவுண்டர்’ என்ற எதிரொலிக் கருவி, நீர்மூழ்கிக் கேமரா, ஒளி வெள்ள விளக்குகள், வீடியோ படப்பிடிப்புக் கருவிகள் மூலம் ஆழ்கடலில் இருண்ட பகுதிகளில் படங்கள் எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. ஆனால் அதிர்வுகள் விட்டு விட்டு வருவதால் நம்பும்படியான எந்த தகவல்களும் முழுமையாக பெறமுடியவில்லை.

இந்தநிலையில் தற்போது ஜப்பான், ஆஸ்திரேலியா, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய 4 நாடுகளிடம் தேடுதல் வேட்டை குறித்து கலந்தாலோசனை செய்யப்பட்டது. இதுதவிர 12 ஏஜென்சிகளின் உதவியும் பெறப்பட்டது. பல்வேறு சவால்களுக்கு இடையே ஒரு மாதமாகியும் தேடுதல் வேட்டை தொடர்கிறது. இதனை தொடர்ந்து மேலும் ஒரு கப்பல் காக்கிநாடாவில் இருந்து இன்று பகல் 2 மணி அளவில் சிதம்பரம் கடல் பகுதிக்கு வர உள்ளது.

ரேடாரில், விமானம் கடலில் விழுந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதால், விமானம் கடத்தப்பட்டதற்கான கேள்வி எழவில்லை. தமிழக அரசின் மீன்வளத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களும் உதவி வருகின்றனர்.

மாயமான விமானத்தில் பயணம் செய்த விமானிகளின் குடும்பத்தினர்களின் கேள்விகளுக்கு உடனுக்குடன் பதில் அளிக்கப்படுகிறது. கருப்பு பெட்டி செயலிழந்த நிலையில், வெளிநாடுகளில் நடந்த விமான விபத்துக்களை கண்டறிந்த விஞ்ஞானி டி.ஜெயபிரபுவின் ‘‘சீஸ்மெட்டிக்’’ என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்று விமானிகளின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து விஞ்ஞானி ஜெயபிரபுவிடம் பேசி உள்ளேன். அந்த முறையை பயன்படுத்துவது குறித்தும் பரிசீலிக்கப்படும்.

Leave a Reply