ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்துக்கு ஆள் சேர்ந்த இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரி கைது
சிரியா மற்றும் ஈராக்கில் தீவிரவாத செயலில் ஈடுபட்டு வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்ததாக ஜெய்ப்பூர் நகரில் இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜெய்ப்பூரில் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் மார்கெட்டிங் மேனேஜராக பணியாற்றி வரும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சிராஜுதீன் என்பவர் தன்னுடைய ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டர் ஆகிய சமூக வலைதளங்கள் வழியாக ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்துக்கு இந்தியாவில் ஆள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் அவரது வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் பக்கங்களை ஆய்வு செய்ததில் தெரிய வந்தது.
மேலும் அவரது வீட்டில் இருந்து சில சந்தேகத்துக்குரிய பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் ஆன்லைன் பதிப்பான ‘தபீக்’ இதழ்களும் , ஐ.எஸ். இயக்கம் தொடர்பான வீடியோக்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் ஜெய்ப்பூர் போலீஸார் கூறியுள்ளனர்.
எனவே சட்டத்துக்கு புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சிராஜுதீனை நேற்று ராஜஸ்தான் போலீசார் கைது செய்தனர்.