கனடாவில் வாழும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு கணித நோபல் பரிசு எனப்படும் “பீல்ட்ஸ் மெடல்” என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. இவருடன் சேர்த்து இந்த பரிசு மொத்தம் நான்கு பேர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வம்சாவளியை சேர்ந்த மஞ்சுள் பார்கவா, ஈரானை சேர்ந்த மரியம் மிர்ஜாகனி, பிரேசில் நாட்டை சேர்ந்த ஆர்தர் அவிலா, மற்றும் ஆஸ்திரியாவின் மார்ட்டின் ஹேரர் ஆகிய நான்கு பேர்களுக்கும் இந்த வருடத்தின் பீல்ட்ஸ் மெடல் வழங்கப்பட்டுள்ளது. கணிதத்துறையில் புதிய கண்டுபிடிப்புகள் செய்ததற்காக இந்த விருது வழங்கப்படுகிறது.
1936–ம் ஆண்டு முதல் சர்வதேச கணித சங்கத்தால் வழங்கப்பட்டு வரும் இந்த “பீல்ட்ஸ் மெடல்” என்ற விருது 15 ஆயிரம் கனடா டாலர் (சுமார் ரூ.5¾ லட்சம்) ரொக்கப்பரிசும், பதக்கமும் கொண்டது.
40 வயதான மஞ்சுள் பார்கவா, 1974–ம் ஆண்டு, ஆகஸ்டு 8–ந் தேதி கனடாவில் ஹேமில்டனில் பிறந்தவர். நியூயார்க்கில் பள்ளிக்கல்வி, கம்ப்யூட்டர் கல்வி முடித்தவர். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்து பி.ஏ. பட்டம் பெற்றார். பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார்.
தற்போது அமெரிக்காவில் நியூஜெர்சியில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் கணித பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். எண் வடிவியலில் புதிய கண்டுபிடிப்புகளை செய்ததற்காக இப்போது இவருக்கு கணித நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இது தொடர்பாக சமீபத்தில் ஆன்லைனில் நடந்த ஓட்டெடுப்பில் 514 ஓட்டுகள் பெற்று இவர் முதல் இடம் பிடித்தார்.