இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹர்பஜன் கெளர் தீர் என்பவர் லண்டன் துணை மேயராக நேற்று முன் தினம் பதவியேற்றார். லண்டனின் துணைமேயராக பதவியேற்கும் முதல் ஆசிய பெண் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். 62 வயதான ஹர்பஜன் கெளர் தீர் அவர்களின் கனவர் ரஞ்சித் தீர் என்பவரும் முன்னாள் மேயர் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன் தினம் லண்டனில் உள்ள விக்டோரியா ஹாலில் ஹர்பஜன் கெளர் தீர் துணை மேயராக பதவியேற்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் லண்டன் வாழ் இந்தியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
பதவியேற்ற பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஹர்பஜன், ‘துணை மேயர் பதவி என்பது மிகப்பெரிய பொறுப்பு. இமயமலையில் ஏறுவது போன்ற இந்த கடினமான பணியை எனது கணவரின் ஒத்துழைப்போடு சிறப்பாக செய்வேன் என உறுதி கூறுகிறேன் என்று கூறினார்.
பஞ்சாப் மாநிலத்தில் பிறந்த ஹர்பஜன் கெளர் தீர், கடந்த 1975ஆம் ஆண்டில் பிரிட்டனுக்கு குடிபெயர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.