மணிக்கு சுமார் 300 கி.மீ. வேகத்தில் ஓடும் சென்னை முதல் டெல்லி வரையிலான அதிவேக புல்லட் ரயிலை இயக்குவதற்காக, சீனாவில் செயல்படுத்தபட்டு வரும் புல்லட் ரெயில் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய இந்திய அதிகாரிகள் சீனா சென்றுள்ளனர்.
சீனாவின் தலைநகர் பீஜிங் நகரில் இருந்து குவாங்ஸோ வரையுள்ள 2, 298 கிலோ மீட்டர் நீளமுள்ள இருப்புப் பாதையில் அதி நவீன புல்லட் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன இந்த புல்லட் ரயிலுக்கு பயணிகள் மத்தியில் மாபெரும் வரவேற்பு உள்ளது. 2,2298 கி.மீ தூரத்தை இந்த ரயில் வெறும் 8 மணி நேரத்தில் சென்றுவிடுகிறது. உலகிலேயே மிகவும் நீளமான மற்றூம் வேகமான புல்லட் ரயில் சேவையாக இது கருதப்பட்டு வருகிறது.
இதே போல, இந்தியாவிலும் சென்னை – டெல்லி இடையிலான 1,754 கிலோ மீட்டர் தூரத்தை புல்லட் ரயில் மூலம் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்தது. சீன அதிபர் இந்தியா வந்தபோது இந்த திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை – டெல்லி புல்லட் ரயில் திட்டத்துக்கு சுமார் 32.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே அதிகாரிகளுக்கு புல்லட் ரயில் திட்டப் பணிகள் குறித்த தொழில் நுட்பத்தை இலவசமாக வழங்குவதாக சீனா சமீபத்தில் அறிவித்தது. இதனை அடுத்து இந்திய ரயில்வே துறையை சேர்ந்த மூத்த அதிகாரிகள், சீனத் தலைநகர் பெய்ஜிங்கிற்கு சென்றுள்ளனர். அங்கு புல்லட் ரயில் பாதைக்கான கட்டமைப்பு பணிகள், இயக்கம், பராமரிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக அந்நாட்டு ரயில்வே உயரதிகாரிகளுடன் அவர்கள் தீவிர ஆலோசனைகள் நடத்தி வருகின்றனர்.
சீனாவின் உதவியோடு அமையும் சென்னை – டெல்லி இடையிலான புல்லட் ரயில் சேவை தொடங்கி விட்டால், உலகிலேயே மிகவும் நீளமான இரண்டாவது புல்லட் ரயில் சேவையாக இது அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.