இந்தியப் பங்குச் சந்தைக் கடந்த மூன்று மாத காலமாக ஏறக்குறைய ஒரு ரேஞ்சிலேயே வர்த்தகமாகி வருகிறது. அதாவது, நிஃப்டி 6000 – 6400 புள்ளிகளுக்கு இடையே ஏறிஇறங்கி, இறங்கிஏறிக்கொண்டிருக்கிறது. சந்தை இப்படியேதான் இருக்குமா? அல்லது ஏற்றம் வருமா? என்ற கேள்விக்கு பதில் அளிக்கிறார் பங்குச் சந்தை நிபுணர் ஏ.கே.பிரபாகர்.
”இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் வரவிருப்பதால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள், அந்நிய நிதி முதலீட்டாளர்கள், இந்திய நிறுவன முதலீட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் பெரிய முதலீட்டு முடிவுகள் எதையும் இப்போது எடுக்கத் தயாராக இல்லை. அவர்களெல்லாம் தேர்தல் கூட்டணி மற்றும் தேர்தல் முடிவுக்காகக் காத்திருக்கிறார்கள். காங்கிரஸ் அல்லது பாரதிய ஜனதா கட்சிக்குத் தனியாகக் குறைந்தபட்சம் 200 சீட்டுகள் கிடைக்கும்பட்சத்தில் இந்தியப் பங்குச் சந்தை மிகப் பெரிய எழுச்சியைச் சந்திக்க வாய்ப்புள்ளது.
ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக ரகுராம் ராஜன் பதவியேற்ற பிறகு அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு நிலைபெறத் தொடங்கி இருக்கிறது. இது இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு உதவி செய்வதாக இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தல் முடிவுக்குப் பிறகு ரூபாய் மதிப்பு 57 – 55-ஆக வலிமை பெற அதிக வாய்ப்புள்ளது.
ஆக, பங்குச் சந்தையில் பெரிய முன்னேற்றம் காணப்படவில்லை என்றாலும், பல தனிப்பட்ட பங்குகளின் விலை அதிகரித்து லாபம் தரத்தான் செய்கின்றன’ என்றவர், தற்போதைய நிலையில் எந்த மாதிரியான பங்குகளில் முதலீடு செய்தால் லாபகரமாக இருக்கும் என்பதை விளக்கினார்.
”ஆர்பிஐ புதிய வங்கிகளுக்கு உரிமம் வழங்குவது குறித்த அறிவிப்பை பிப்ரவரி இரண்டு அல்லது மூன்றாவது வாரத்தில் அறிவிக்க உள்ளது. அந்த வகையில், எந்தக் குழுமம் மற்றும் கம்பெனிகளுக்கு வங்கி ஆரம்பிக்க உரிமம் கிடைக்கிறதோ, அவற்றின் பங்குகள் 2014-15-ம் ஆண்டில் நல்ல லாபம் தரும் என எதிர்பார்க்கலாம். இப்படி உரிமம்பெறும் நிறுவனங்களின் பங்கு விலை பத்தாண்டுகளில் பத்து மடங்குக்குமேல் விலை அதிகரிக்க வாய்ப்புண்டு. இதை ஓர் உதாரணம் மூலம் பார்த்தால் எளிதில் விளங்கும்.
யெஸ் பேங்க் விலை 2009-ல் ரூ.50-ஆக இருந்தது. இது 2013-ல் 305 ரூபாய்க்கு அதிகரித்துள்ளது. இடையில் 500 ரூபாய் வரைக்கும் ஏறிஇறங்கி உள்ளது. இதேபோல், இண்டஸ் இந்த் பேங்க் (1998-ல் ரூ.32, 2013ல் 378), கோட்டக் மஹிந்திரா பேங்க் (2003-ல் ரூ.14, 2013-ல் ரூ.600), ஹெச்டிஎஃப்சி பேங்க் (1996-ல் ரூ.6, 2013-ல் ரூ.631) போன்ற பங்குகளும் நல்ல லாபம் தந்துள்ளன.
ஐடிஎஃப்சி, எல்ஐசி ஹெச்எஃப்எல், ஆர்.இ.சி, ஆதித்ய பிர்லா மணி, பஜாஜ் ஃபைனான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்குப் புதிய வங்கித் தொடங்க உரிமம் கிடைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. இந்த நிறுவனங் களுக்கு வங்கி உரிமம் கிடைத்தால், அவற்றின் பங்கு முதலீட்டில் நீண்டகாலத்தில் கணிசமான ஆதாயம் பார்க்க முடியும். 8, 10 வருடங்களில் இதன் விலை பலமடங்காக உயரும்!
அடுத்து பாரதிய ஜனதா ஆட்சியைப் பிடிக்கும் என வெளிநாட்டு முதலீட்டாளர்களும் நிதி நிறுவனங்களும் எதிர்பார்க்கின்றன. அப்படி நடக்கும்பட்சத்தில் பொதுத்துறை நிறுவனங்கள் மிகச் சிறப்பாகச் செயல்பட வாய்ப்புள்ளது. இதை மனதில் வைத்து இப்போதே எஃப்ஐஐகள் முன்னணி பொதுத்துறை நிறுவனங்களில் முதலீடு செய்ய ஆரம்பித்திருக்கின்றனர். கெயில், செயில், ஓஎன்ஜிசி, ஆயில் இந்தியா, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் போன்ற நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்ய எஃப்ஐஐகள் அதிக ஆர்வமாக இருக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் பொதுத்துறை நிறுவனங்களில் எஃப்ஐஐ-களின் முதலீடு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
நிஃப்டி புள்ளிகள் 6000 நிலையில் சற்று இறங்கிக் காணப்படுகிறது. அது 5970 புள்ளிகளுக்குக் கீழே இறங்காதவரையில் மேலே செல்லத்தான் அதிக வாய்ப்பு உள்ளது. வரும் ஏப்ரலுக்குள் சந்தை 6500 – 6800 வரைக்கும் செல்லக்கூடும். நிஃப்டி பங்குகளில் ஐசிஐசிஐ பேங்க், எல் அண்ட் டி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐடிசி போன்ற பங்குகள் நல்ல லாபம் தர வாய்ப்புள்ளது’ என்றார் ஏ.கே.பிரபாகர்.
இதே கருத்தைதான் ஈக்விட்டி ரிசர்ச் அனலிஸ்டான ஜி.சொக்கலிங்கமும் தெரிவித்தார். ”எஃப்ஐஐகள் இப்போது பெரிய முதலீட்டு முடிவு எதையும் எடுக்காமல் இருக்கிறார்கள். அவர்கள் மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் முதல் மாதத்தில்தான் புதிய முதலீட்டு முடிவுகளை எடுக்கவிருக்கிறார்கள். இந்தியாவைப் பொறுத்தவரையில் தமிழ்நாடு, மேற்கு வங்காளம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் மாநில கட்சி வலிமையாக உள்ளன. இந்தக் கட்சிகளுடன் தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாரதிய ஜனதா வைக்கும் கூட்டணியைப் பொறுத்துதான் வெற்றி, தோல்வி இருக்கிறது. இந்தக் கூட்டணி உருவாக்கங்கள் மார்ச் நடுவில் நடக்கும். அப்போதுதான் எஃப்ஐஐகள், மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் உள்ளிட்டவை முதலீட்டு முடிவை எடுக்கும். அதுவரைக்கும் நீண்டகால முதலீட்டாளர்கள் காத்திருக்கத் தேவையில்லை. நல்ல திறமையான நிர்வாகம், அதிக டிவிடெண்ட் யீல்டு, வலிமை அடிப்படை கொண்ட நிறுவனப் பங்குகளை வாங்கத் தொடங்கிவிடலாம்.
ஏற்கெனவே முதலீடு செய்து நல்ல விலை கண்டிருக்கும் பங்குகளை விற்று லாபம் பார்த்துவிட்டு, நன்றாக விலை இறங்கிக் காணப்படும், அடிப்படையில் வலிமையான மிட் கேப் பங்குகளில் முதலீடு செய்தால் அதிக லாபம் பார்க்க முடியும்” என்றவரிடம், ‘விலை உயரக்கூடிய பங்குகளைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியுமா?’ என்று கேட்டோம்.
”எல்ஜி பாலகிருஷ்ணன் பிரதர்ஸ்,ஹெரிடேஜ் ஃபுட்ஸ், எம்பஸிஸ் (விஜீலீணீsவீs), ஆர்எஸ்டபிள்யூஎம், ஜேகே டயர்ஸ் போன்ற பங்குகளை விலை குறையும்போது வாங்கிவந்தால் ஓராண்டுக் காலத்துக்குள் கணிசமான வருமானம் பார்க்க முடியும்’ என்றவரிடம் சந்தையின் போக்கு எப்படி இருக்கும் என்றோம்.
”மார்ச், ஏப்ரலில் சென்செக்ஸ் புள்ளிகள் 20000 – 21000 இடையே காணப்படும். காங்கிரஸ் அல்லது பாரதிய ஜனதாவுக்குத் தனிப்பட்ட முறையில் 200 சீட்டுகளுக்குமேல் கிடைக்கும்பட்சத்தில் சந்தை வேகமாக மேலேறிவிடும்” என்றார் ஜி.சொக்கலிங்கம்.
நல்ல காலம் பிறக்கட்டும் என்று காத்திருக்காமல் களமிறங்குவதே புத்திசாலித்தனம்!