“வெல்த் எ எக்ஸ்” என்ற தனியார் நிறுவனம் ஆசியாவின் இளம் கோடீஸ்வரர்கள் குறித்த ஒரு பட்டியலை கடந்த சில நாட்களாக எடுத்து வந்தது. இந்த பட்டியலில் 40 வயதுக்கு உட்பட்டவர்களின் பெயர்கள் மட்டும் பரிசீலிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த பட்டியலின் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இந்தியாவின் இளம் தொழிலதிபர் அருண் புதூர் முதலிடத்டை பெற்றுள்ளார். சென்னையை சேர்ந்த 37 வயதே ஆன அருண், மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் தற்போது வசித்து வருகிறார். இவருடைய மொத்த சொத்து மதிப்பு இந்திய மதிப்பில் சுமார் 25 ஆயிரத்து 580 கோடி ஆகும்.
சென்னையில் பிறந்து பெங்களூரில் படிப்பை முடித்த அருண், கடந்த 1998ஆம் ஆண்டு செல்பிரேம் என்ற நிறுவனத்தை தொடங்கினார். இவரது நிறுவனம் மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு அடுத்தபடியாக, உலகின் இரண்டாவது மிகப் பிரபல ‘வோர்டு புராஸஸர்’ மென்பொருளை உற்பத்தி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மென்பொருள் நிறுவனம் தவிர கனிமச் சுரங்கம், ரியல் எஸ்டேட் போன்ற துறைகளிலும் அருண் புதூர் தனது கவனத்தை திருப்பி சாதனை படைத்து வருகிறார்.
இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை சீனாவைச் சேர்ந்த ஜோ யாஹுயி என்பவர் பிடித்துள்ளார். இவருடைய சொத்து மதிப்பு 220 கோடி டாலர் ஆகும். இந்தப் பட்டியலில் உள்ள முதல் 10 பேரில் சீனாவைச் சேர்ந்த 6 பேரும், ஜப்பானைச் சேர்ந்த மூவரும் உள்ளனர்.