சுவிஸ் வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் இந்தியர்களின் பட்டியலை இந்திய அரசிடம் தருவதற்கு சுவிஸ் அரசு ஒப்புக்கொண்டுள்ளது. இதனால் சுவிஸ் வங்கியில் யார் யார் எவ்வளவு பணம் பதுக்கியுள்ளனர் என்ற விபரம் இன்னும்சில நாட்களில் வெளிச்சத்துக்கு வரும் என தெரிகிறது.
கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் சுவிஸ் வங்கியிடம் இந்தியர்கள் பதுக்கிய பணம் குறித்த விவரங்களை கேட்டபோது, அந்த விபரங்களை தருவதற்கு மறுத்து வந்த சுவிஸ் அரசு, தற்போது ஆட்சி மாறியவுடன் அந்த பட்டியலை தருவதற்கு ஒப்புக்கொண்டுள்ளது.
சுவிஸ் வங்கியில் முதலீடு செய்யப்பட்டிருக்கும் வெளிநாட்டு பணத்தின் மொத்த மதிப்பு சுமார் ரூ.96 லட்சம் கோடி என்றும், அதில் இந்தியர்களின் பணம் ரூ.14000 கோடி என்றும் சுவிஸ் அரசு தெரிவித்துள்ளது. சுவிஸ் வங்கியில் முதலீடு செய்த நாடுகளில் பிரிட்டன் முதலிடத்தில் உள்ளது. இந்தியா கடந்த வருடம் 70வது இடத்தில் இருந்தது. ஆனால் இந்த வருடம் 58வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
சுவிஸ் வங்கியில் முதலீடு செய்யப்பட்ட இந்தியர்கள் குறித்த பட்டியல் இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ளதால் அதில் முதலீடு செய்தவர்கள் கலக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.