இந்தியாவின் தென்கோடியில் உள்ள அகஸ்திய மலைக்கு யுனெஸ்கோ புதிய அங்கீகாரம்
யுனெஸ்கோ என்ற அமைப்பில் ஒவ்வொரு ஆண்டும் உலகில் உள்ள முக்கிய இடங்களை தேர்வு செய்து அதை யுனெஸ்கோவின் உயிர்க்கோள காப்பக பட்டியலில் இணைக்கப்படும். இந்த ஆண்டும் அதே போன்று பல முக்கிய இடங்கள் இதில் இணைக்கப்பட்டது. அவற்றில் ஒன்றாக தமிழகத்தின் தென்கோடியில் உள்ள அகஸ்திய மலை இணைக்கப்பட்டுள்ளது.
யுனெஸ்கோவின் 2 நாள் மாநாடு பெரு தலைநகர் லிமா என்ற நகரில் கடந்த 19 ஆம் தேதி தொடங்கியது. இந்த மாநாட்டில் யுனெஸ்கோ பட்டியலில் புதிதாக இணைக்கப்பட்டவைகளில் 18 தேசிய நினைவிடங்களும், ஸ்பெயின்-போர்ச்சுக்கல் இருநாடுகளிலும் பரவியுள்ள ஓரிடமும் அடங்கும். மேலும் மேற்குத் தொடர்ச்சி மலையின் தென்கோடியில் அமைந்துள்ள அகஸ்திய மலையும் இதில் இணைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் வெப்ப மண்டலக் காட்டுப்பகுதியான இங்கு 2,254 வகையான தாவரங்கள், சுமார் 400 ஓரிட வாழ்விகள் உள்ளன. அகஸ்திய மலையில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், செந்துருனி, பெப்பாரா, நெய்யாறு ஆகிய சரணாலயங்கள் உள்ளன.
2,000-க்கும் அதிகமான பூக்கும் தாவர இனங்கள், நூற்றுக்கணக்கான அரிய தாவர வகைகள், சிங்கவால் குரங்கு, காந்தக் கீரி, நீலகிரி வரையாடு, 273 பறவையினங்கள், 200 வகையான ஊர்வனங்கள் இம்மலையில் உள்ளன. மேலும், கடல்மட்டத்திலிருந்து 1,868 மீட்டர் உயரமுள்ள சிகரமும் உள்ளது. தமிழகம் மற்றும் கேரளம் என இரு மாநிலங்களிலும் பரந்து விரிந்துள்ளது இந்த அகஸ்திய மலை. ஏற்கனவே இந்தியாவில் 18 உயிர்க்கோள காப்பகங்கள் உள்ளன. இவற்றில், நீலகிரி, நந்தா தேவி, நோக்ரெக், மன்னார் வளைகுடா, சுந்தரவனக் காடுகள், கிரேட் நிகோபார் ஆகிய 9 உயிர்க்கோளங்கள் மட்டுமே யுனெஸ்கோவின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
Chennai Today News: India’s Agasthyamala among 20 UNESCO world biosphere reserves