பாலியல் குற்றவாளியின் பேட்டி உள்பட ‘இந்தியாவின் மகள்’ என்ற ஆவணப்படத்தை ஒளிபரப்ப இந்திய அரசும், டில்லி நீதிமன்றமும் தடை விதித்திருந்த நிலையில் தடையை மீறி பிபிசி தொலைக்காட்சி அந்த ஆவணப்படத்தை ஒளிபரப்பியது. இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள இந்திய அரசுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி தரும் விஷயமாக அந்த ஆவணப்படம் யூடியுபிலும் பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
யூடியூபில் உள்ள இந்த ஆவணப்படத்தை உடனடியாக நீக்கவேண்டும் என டெல்லி காவல்துறை வலியுறுத்தி மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.
பிபிசி தொலைக்காட்சி உண்மையில் வரும் 8ஆம் தேதி மகளிர் தினத்தில் ஒளிபரப்பவிருந்த ‘இந்தியாவின் மகள்’ ஆவணப்படத்தை இந்திய அரசின் தடை காரணமாகவே திடீரென முன்கூட்டியே கடந்த 4ஆம் தேதி இரவே லண்டன் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இந்நிலையில், தடையை மீறி ஆவணப்படத்தை ஒளிபரப்பிய பி.பி.சி. மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ”இந்த ஆவணப்படத்தை ஒளிபரப்ப வேண்டாம் என்று கூறியும், பி.பி.சி. நிறுவனம் அதை ஒளிபரப்பி இருப்பது வேதனையை தருகிறது. இதற்காக பி.பி.சி. நிறுவனம் மீது இந்திய அரசின் சார்பில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.