பொருளாதார வளர்ச்சியில் சீனாவை இந்தியா மிஞ்சிவிட்டதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பெருமையுடன் தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் “நாட்டின் பொருளாதார வளர்ச்சி, சென்ற, 2014 – 15ம் நிதியாண்டின் மார்ச்சுடன் முடிந்த நான்காவது காலாண்டில், 7.5 சதவீதமாக உயர்ந்து உள்ளது என்று கூறினார்.
கடந்த நிதி ஆண்டின் இறுதி காலாண்டில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி 7.4% என்று தெரிவித்த அருண் ஜேட்லி, சீனாவின் பொருளாதார வளர்ச்சியை இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 0.1% உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டார்.
இன்றைய சூழலில் உலகிலேயே மிகவும் வேகமான பொருளாதார வளர்ச்சி அடையும் நாடு இந்தியாதான் என்று பெருமையுடன் தெரிவித்தார். பொருளாதார வளர்ச்சி வேகமாக இருந்தால் அது நீண்ட நாளுக்கு நீடிக்காது என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின் விமர்சனத்தை அருண் ஜேட்லி நிராகரித்தார்.
மிகவும் கவலை அளிக்க கூடிய பிரச்சனையாக இருந்த பணவீக்கம் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளதாகவும், இதன் அடிப்படையில் ரெப்போ விகிதத்தை குறைக்குமாறு ரிசர்வ் வங்கியிடம் கேட்டுக்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்