இந்தியாவின் முதல் தலித் அர்ச்சருக்கு மேளதாள வரவேற்பு
தலித் உள்பட பிறசாதியினர் அர்ச்சகர் ஆகும் நடவடிக்கையை கேரள அரசு எடுத்துள்ளதற்கு இந்தியா முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. தமிழகம் உள்பட பிற மாநிலங்களும் இதை பின்பற்ற வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் முறையாக தேர்வு எழுதி அர்ச்சகர் ஆன தலித் ஒருவர் நேற்று தனது பொறுப்பை ஏற்று கொண்டார். இதன் மூலம் இந்தியாவிலேயே அர்ச்சகர் ஆன முதல் தலித் என்ற பெருமையை இவர் பெற்றார். இவர் திருச்சூர் அருகிலுள்ள கொரட்டி பகுதியைச் சேர்ந்த யேது கிருஷ்ணன் என்ற 22 வயது இளைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருக்கு நேற்று பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள மணப்புறம் சிவன் கோவிலில் அர்ச்சகராகும் பணி ஆணை வழங்கப்பட்டது. இவரை கோவில் நிர்வாகிகளும், பக்தர்களும் மேளதாளங்களோடு வரவேற்றனர். அந்தக் கோவிலின் தலைமை அர்ச்சகரான கோபகுமார், யேது கிருஷ்ணாவை கோவில் கருவறைக்கு அழைத்துச் சென்று, மூல மந்திரங்களைச் சொல்லிக் கொடுத்தார்.