ஏர் இந்தியாவை வாங்க தயார்: மத்திய அரசுக்கு இண்டிகோ கடிதம்
ஏர் இந்தியா நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருவதால் அதன் பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு செய்திருக்கும் நிலையில் இந்த விமான சேவையை வாங்க இண்டிகோ விமான நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இண்டிகோ விமான நிறுவனம் மத்திய அரசுக்கு விரிவானக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளதாக விமான போக்குவரத்துத்துறை செயலாளர் ஆர். என். சவுபே உறுதிசெய்துள்ளார்.
ஏர் இந்தியாவின் சர்வதேச விமான சேவையையும், அதன் குறைந்த விலை விமான சேவையான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்களையும் இண்டிகோ நிறுவனம் வாங்க தயாராக இருப்பதாக இண்டிகோ நிறுவனத் தலைவர் அதித்யா கோஷ் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
ஒருவேளை ஒரு பகுதியை வாங்குவது சாத்தியமில்லாவிட்டால் ஏர் இந்தியா நிறுவனத்தை முழுமையாக வாங்க தயாராக இருப்பதாகவும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இண்டிகோ தவிர வேறு ஒருசில நிறுவனங்களும் ஏர் இந்தியாவை வாங்குவதில் ஆர்வம் காட்டி இருப்பதாகவும், ஆனால் முறையாக கடிதம் எழுதியது இண்டிகோ மட்டும்தான் என விமான போக்குவரத்துத்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா குறிப்பிட்டார்.