இந்திய – சீன எல்லையில் சீன ராணுவம் தொடர்ந்து ஊடுருவி வரும் நிலையில் டெல்லியில் வரும் 24-ம் தேதி நடைபெறவிருந்த இந்திய-சீன செய்தியாளர்கள் பேச்சுவார்த்தையை இந்தியா அதிரடியாக ரத்து செய்துள்ளது. சீன செய்தியாளர்கள் டெல்லி வருவதற்கு வழங்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு ரத்து செய்துள்ளதால், இந்த பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
சீன அதிபர் ஜி ஜின்பிங் கடந்த வாரம் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியாவுக்கு வருகை வந்திருந்தார். அப்போது இருநாட்டு தலைவர்களுக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. எல்லைப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்க இரு தலைவர்களும் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
சீன அதிபரின் இந்திய பயணத்தின்போதே, இந்திய எல்லையில் உள்ள சுமர் பகுதியில் சீன ராணுவம் திடீரென ஊடுருவியது. அந்த பகுதியில் சாலை அமைப்பதற்கான முயற்சியில் சீன ராணுவம் ஈடுபட்டபோது அதற்கு இந்திய ராணுவம் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அங்கிருந்து சீன ராணுவ வீரர்கள் வெளியேறினர்.
ஆனால், மீண்டும் கடந்த சனிக்கிழமை சுமர் பகுதியில் சீன ராணுவம் ஊடுருவியுள்ளது. அவர்களை வெளியேறுமாறு இந்திய ராணுவம் வலியுறுத்தி வருகிறது. எல்லையில் சாலை அமைக்கும் பணிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் ராணுவ வீரர்களை சீன அரசு நிறுத்திவைத்துள்ளது.
இந்நிலையில், வரும் 24-ம் தேதி டெல்லியில் இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்த செய்தியாளர்கள் சந்தித்துப் பேசுவதற்கான கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பங்கேற்க வரும் சீனாவின் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி செய்தி சேனல்களின் ஆசிரியர்கள் மற்றும் நிருபர்களுக்கு இந்திய அரசு ஏற்கெனவே வழங்கியிருந்த அனுமதி அனுமதி நேற்று திடீரென ரத்து செய்யப்பட்டதால் இந்த பேச்சுவார்த்தயும் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
சீன ராணுவத்தின் ஊடுருவல் நடைபெற் றிருக்கும் வேளையில், அந்நாட்டைச் சேர்ந்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது சரியாக இருக்காது என்பதால் இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது