கடலில் விழுந்த இந்தோனேஷிய விமானம். இதுவரை 40 உடல்கள் மீட்பு.

dead bodies கடந்த ஞாயிறு அன்று இந்தோனேஷியாவில் இருந்து சிங்கப்பூருக்கு கிளம்பிச்சென்ற விமானம் சில நிமிடங்களில் மாயமானது. மாயமான அந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்த அனைவரும் கடலில் முழ்கி இறந்திருக்கலாம் என்ற கருதிய நிலையில் நேற்று 40-க்கும் மேற்பட்டோரின் உடல்கள், ஜாவா கடல் பகுதியிலிருந்து மீட்புக்குழுவினர் மீட்டதாக இந்தோனேசிய கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

விமானத்தை தேடும் நடவடிக்கையின்போது, போர்னியோ தீவு அருகே  விமானத்தின் பாகங்கள் சிதறிக்கிடந்ததாகவும், விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடல்கள் மற்றும் பொருட்கள் கடலில் மிதப்பதையும் இந்தோனேசிய கடற்படை அதிகாரிகள் நேற்று மாலை கண்டுபிடித்தனர். இதையடுத்து ஹெலிகாப்டர்களில் விரைந்து சென்ற மீட்பு படையினர் அந்தப் பகுதியில் மிதந்துகொண்டிருக்கும் உடல்களை கயிறு மூலம் கட்டி மீட்புக்கப்பலில் சேர்த்தனர்.

இதுவரை 40-க்கும் மேற்பட்டோரின் உடல்கள் மீட்கப்பட்டதாகவும் மீதி உடல்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் இந்தோனேசிய கடற்படை செய்தித் தொடர்பாளர் மனாஹன் சிமிரோங்கிர் தெரிவித்தார்.

இது குறித்து இந்தோனேசிய தேசிய பேரிட மீட்பு குழு இயக்குனர் எஸ்.பி. சுப்பிரியாதி கூறும்போது, “நீரால் உப்பிய சில உடல்கள் மீட்கப்பட்டு கடற்படைத் தளத்துக்கு முதற்கட்டமாக கொண்டுவரப்பட்டது. ஆனால் அவை அடையாளம் காணும் நிலையில் இல்லை. உடல்களில் உயிர் காக்கும் கவசங்கள் எதுவும் காணப்படவில்லை. மீட்பு குழுவினர் ஹெலிகாப்டர்களுடன் அந்த பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

விமானத்தின் கதவு போன்ற சில பாகங்கள் மட்டுமே முதலில் தென்பட்டது. அதன் பின்னர் அங்கு ஆய்வு செய்தபோது உடல்கள் இருப்பது உறுதியானது” என்றார்

Leave a Reply