இந்தோனேசியா நாட்டில் இன்று காலை 7.3 ரிக்டர் அளவுக்கு மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் இந்தோனேசியா, ஜப்பான், தைவான், தெற்கு பசிபிக் தீவுகளில் சுனாமி ஏற்படலாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்தோனேசியா நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள மலுக்கா தீவுகளில் இந்த பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவாகியுள்ளதால் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் இருந்து 300 கிலோ மீட்டருக்குள் சுனாமி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் 30 செ.மீ. முதல் 1 மீட்டர் உயரம் வரை கடலலைகள் எழும்ப வாய்ப்பு உள்ளது என்றும், கடலோர பகுதிகளில் வாழும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு மாறும்படியும் பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் கூறியுள்ளது.
இது குறித்து இந்தோனேசிய வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் அளித்த பேட்டியில், முதல் சுனாமி அலை எழ இன்னும் சில நிமிடங்களே இருப்பதால் பொதுமக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல ஏதுவாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதம் குறித்தான தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை.
கடந்த 2004-ம் ஆண்டில், சுமத்ரா தீவுகளின் மேற்கே ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து தாக்கிய சுனாமியில் அகே மாகாணத்தில் சுமார் 1,70,000 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.