ஏர் ஏசியாவுக்கு சொந்தமான விமானம் ஒன்று நேற்று மாயமானது. அந்த விமானம் கடலில் விழுந்ததாக இந்தோனேஷியா அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தோனேஷியாவின் சுரபயா விமான நிலையத்திலிருந்து 162 பயணிகளுடன் நேற்று காலை சிங்கப்பூர் நகருக்கு புறப்பட்ட ஏர் ஏசியா விமானம் கிளம்பிய சிறிது நேரத்திலேயே வானில் திடீரென மாயமானது.
இந்த விமானம், தனது பயணத்தை தொடங்கிய 42 நிமிடங்களில் சரியாக நேற்று காலை 7.42 மணிக்கு விமான கட்டுப்பாட்டு அறையில் இருந்து தொடர்பு துண்டிக்கப்பட்டதாகவும் அதன் பின்னர் திடீரென மாயமானதாகவும் சிங்கப்பூர் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் இன்று காலை வெளியிட்ட ஒரு அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளது. விமானத்தின் தகவல் துண்டிப்பை அடுத்து மாயமான ஏர் ஏசியா விமானத்தை தேடும் பணியில் அதிகாரிகள் தீவிரம் காட்டினர்.
இந்நிலையில், ஏர் ஏசியா விமானம் கடலில் விழுந்ததாக இந்தோனேசியா இன்று தெரிவித்துள்ளது. அந்த விமானத்தில் பயணம் செய்த 162 பேரும் பலியாகியிருக்கலாம என அஞ்சப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, விமான பாகங்களை கடலில் தேடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.இந்த விமானம் தீவிரவாதிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருவதாக இந்தோனேஷியா அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து கருத்து தெரிவித்த ஏர் ஏசியா நிறுவனத்தின் தலைவர், தன்னுடைய வாழ்நாளிலேயே இதுதான் சோகமான நாள்’ என்றார்.