திருப்பதி : ஏழுமலையான் சேவா டிக்கெட், இன்று முதல், குலுக்கல் முறையில் வழங்கப்படும் என, திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்து உள்ளது.திருமலை ஏழுமலையானுக்கு, அதிகாலை, சுப்ரபாத சேவை முதல், நள்ளிரவு, ஏகாந்த சேவை வரை, பல வகையான சேவைகள் நடைபெறுகின்றன. அதை காண விரும்பும் பக்தர்கள், அதற்கென நிர்ணயித்திருக்கும் கட்டணம் செலுத்தி, டிக்கெட் பெற்று பங்கு கொள்ளலாம்.இந்த சேவா டிக்கெட்டை, பக்தர்கள், மூன்று மாதத்திற்கு முன், இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.மேலும், சேவைக்கு முன்தினம், நிலுவையில் உள்ள சேவா டிக்கெட், திருமலையில் உள்ள, விஜயா வங்கியிலும் வழங்கப்படும். குறைந்த அளவில் உள்ள, இந்த டிக்கெட்டைப் பெற, பக்தர்கள் தினசரி நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.மேலும், பக்தர்கள் முன்பதிவு செய்து, பின் சில காரணங்களால் ரத்து செய்யும், தோமாலை, அர்ச்சனா, மேல்சாட் வஸ்திரம், அபிஷேகம் டிக்கெட்டை, தேவஸ்தானம், திருமலையில், தினசரி எலக்ட்ரானிக் குலுக்கல் முறையில், பக்தர்களுக்கு அளித்து வருகிறது.அதில் தற்போது, சுப்ரபாதம், கல்யாணோற்சவம், விசேஷ பூஜை, சகஸ்ர கலசாபிஷேகம், திருபாவாடை, நிஜபாத தரிசனம் டிக்கெட்டையும், இணைக்க உள்ளது. இந்த புதிய முறையை, தேவஸ்தானம் இன்று முதல், திருமலையில் அமல்படுத்த உள்ளது.மேலும், இன்னும் இரு மாதங்களில், ஆர்ஜித பிரம்மோற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்ரதீபாலங்கார சேவை, வசந்தோற்சவம் டிக்கெட்டில், மாற்றம் கொண்டு வர உள்ளதாக, தேவஸ்தானம் தெரிவித்தது.